மூடப்பட்ட பிக் பஸார்... ரிலையன்ஸ் கட்டுபாட்டுக்குள் வருகிறதா?

மூடப்பட்ட பிக் பஸார்... ரிலையன்ஸ் கட்டுபாட்டுக்குள் வருகிறதா?
மூடப்பட்ட பிக் பஸார்... ரிலையன்ஸ் கட்டுபாட்டுக்குள் வருகிறதா?

பியூச்சர் குழுமம் இந்தியா முழுவதும் ரீடெய்ல் நிறுவனங்களை நடத்தி வருகிறது. கடந்த சனிக்கிழமை முதல் பியூச்சர் குழுமத்தின் ரீடெய்ல் ஸ்டோர்கள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுமத்தின் ஆன்லைன் பிரிவும் செயல்படவில்லை. இந்த நிலையில் கணிசமான ஸ்டோர்களை ரிலையன்ஸ் நிறுவனம் கட்டுப்பாட்டில் எடுக்க இருப்பதாகவும், பெயர் மாற்றம் செய்து ரிலையன்ஸ் ரீடெய்ல் என்னும் பெயரில் செயல்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இது குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், எங்களுடைய செயல்பாட்டினை நாங்கள் குறைத்துக்கொள்கிறோம் என்னும் செய்தியை மட்டும் பங்குச்சந்தை அமைப்புகளுக்கு பியூச்சர் ரீடெய்ல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மேலும் எங்களது ஸ்டோர்கள் இரு நாட்களாக செயல்படவில்லை என பொதுவான தகவலை ட்விட்டரில் தெரிவித்திருக்கிறது.

கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பியூச்சர் குழுமத்தை ரூ.24713 கோடிக்கு வாங்குவதாக் ரிலையன்ஸ் வாங்குவதாக அறிவித்தது. ஆனால் பியூச்சர் குழுமத்துக்கும் அமேசான் குழுமத்துக்கும் இடையேயான ஒப்பந்தம் காரணமாக சர்வதேச அளவில் வழக்கு அமேசான் வழக்கு தொடுத்தது. அதனால் இந்த டீல் முடியவில்லை. அதனால் பியூச்சர் குழுமம் செலுத்த வேண்டிய கடன்களை சரியாக செலுத்த முடியவில்லை.

பியூச்சர் குழுமம் செலுத்த பல கடன்கள் செலுத்த வேண்டியது. அதில் கடைகளுக்கான வாடகையும் முக்கியம். வாடகை செலுத்தாததால் நில உரிமையாளர்கள் பியூச்சர் குழுமத்துக்கு நெருக்கடி கொடுத்தனர். ஒரு வேளை வாடகை செலுத்தாவிட்டால் திவால் சட்டத்தின் கீழ் நிறுவனம் சென்றுவிடும். அதனை தவிர்ப்பதற்காக ரிலையன்ஸ் வந்தது. கடைகளுக்கான உரிமம் எடுத்து அதனை பியூச்சர் குழுமத்துக்கு ரிலையன்ஸ் கொடுத்திருக்கிறது. தவிர வொர்கிங்க் கேபிடலுக்கான பணமும் ரிலையன்ஸ் கொடுத்திருக்கிறது. தற்போது இந்த வாடகையையும் பியூச்சர் குழுமத்தால் ரிலையன்ஸுக்கு செலுத்த முடியவில்லை என்பதால் பியூச்சர் குழுமத்தின் கடைகளை ரிலையன்ஸ் எடுத்துக்கொள்கிறது.

ரிலையன்ஸ் நிறுவனம் நில உரிமையாளர்களிடம் டீல் செய்திருப்பது அமேசான் நிறுவனத்துக்கு அதிர்ச்சியாக இருக்கும் என்றே கருதப்படுகிறது. வழக்குகள் நடந்துவரும்போது இதுபோன்ற நடவடிக்கையை அமேசான் எதிர்பார்க்கவில்லை என்றே வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

பியூச்சர் வசம் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஸ்டோர்கள் இருந்தாலும் இப்போதைக்கு 200 ஸ்டோர்களை ரிலையன்ஸ் கையகப்படுத்தும் எனத் தெரிகிறது. அந்த ஸ்டோர்களில் பணியாற்றியவர்கள் ரிலையன்ஸ் குழும பணியாளர்களாக மாறுவார்கள் என்றும், ஸ்டோர்களில் உள்ள பொருட்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றும் தெரிகிறது. அடுத்த சில நாட்களில் ரிலையன்ஸ் பெயரில் சில நூறு கடைகள் செயல்படத்தொடங்கும் என தெரிகிறது.

பியூச்சர், ரிலையன்ஸ் மற்றும் அமேசான் நிறுவனங்களுக்கு இடையேயான சிக்கல் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது.

- வாசு கார்த்தி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com