அமெரிக்க நிறுவனத்தின் தலைமை பதவியை ஏற்கிறார் சென்னைப் பெண் !
அமெரிக்காவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனம் ஜெனரல் மோட்டோராஸ். உலகப் புகழ்ப் பெற்ற செவர்லே (Chevrolet) மாடல் கார்கள், இந்நிறுவனத்தின் தயாரிப்புகளே. அமெரிக்காவின் ஆட்டோமொபைல் தலைநகரான டெட்ராய்ட்டில் ஜெனரல் மோட்டார்ஸ் தலைமையகம் அமைந்துள்ளது. இந்த மிகப்பெரிய நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக, நம்ம சென்னையைச் சேரந்த திவ்யா சூர்யதேவரா (39) விரைவில் பதவியேற்கவுள்ளார்.
இப்போது கார்ப்பரேட் பைனான்ஸ் அமைப்பின் துணைத் தலைவராக இருக்கும் திவ்யா சூர்யதேவரா, செப்டம்பர் 1-ம் தேதி ஜிஎம் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாகப் பதவி ஏற்பார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்போது, ஜிஎம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக மேரி பாரா(வயது56) என்ற பெண் இருந்து வருகிறார். இப்போது திவ்யா சூர்யதேவராவும் தலைமை பதிவுக்கு வருகிறார். ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் இரு தலைமைப் பொறுப்புகளிலும் பெண்கள் இருப்பது, அதுவும் ஆட்டோமொபைல் துறையில் இதுவே முதல் முறை.
சென்னையில் பிறந்த திவ்யா சூர்யதேவரா தனது இளநிலை மற்றும் முதுநிலை வணிகவியல் பட்டப்படிப்பை சென்னை பல்கலைக்கழகத்தில் முடித்தார். பின்னர் அமெரிக்காவில் ஹார்வார்ட் பல்கலைக்கழக்தில் எம்பிஏ பயில்வதற்காகத் தனது 22-வயதில் அமெரிக்கா சென்றார்.திவ்யா பட்டயக் கணக்காளராகவும், நிதி ஆய்வாளராகவும் பயிற்சி பெற்றார். அமெரிக்காவில் உள்ள யுபிஎஸ் மற்றும் பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினார். அதன்பின் கடந்த 2005-ம் ஆண்டு டெட்ராய்ட் நகரைச் சேர்ந்த ஜிம் நிறுவனத்தில் திவ்யா தனது 25-வயதில் பணியில் சேர்ந்தார்.
இப்போபோது ஜிஎம் நிறுவனத்தின் நிதி அதிகாரியாக இருக்கும் ஸ்டீவன்ஸ்(வயது58) கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரியில் இருந்து அந்த பதவியில் இருந்து வருகிறார். ஏறக்குறைய 40 ஆண்டுகளாக ஜிஎம் நிறுவனத்தில் ஸ்டீவன்ஸ் பணியாற்றி வருகிறார். ஸ்டீவன்ஸ் ஓய்வு பெற்றாலும், தொடர்ந்து நிறுவனத்தின் ஆலோசகராகச் செயல்பட உள்ளார்.