தமிழகம் போன்ற மாநிலங்கள் அதிக அளவு வரிப்பணத்தை விட்டுத் தருகின்றன - நிதியமைச்சர் தியாகராஜன
’ஜிஎஸ்டி கட்டமைப்பில் மாற்றம் தேவை’ என தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தி உள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் குறித்து தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
“மாநில அரசுகளின் உரிமைகளை பாதுகாப்பது குறித்து ஜிஎஸ்டி கூட்டத்தில் பதிவு செய்ததாக அவர் தெரிவித்தார். ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு என்ற நடைமுறை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. மக்கள் தொகை அடிப்படையில் வாக்கு நிர்ணயிக்கப்பட வேண்டும். மத்திய அரசு மாநிலங்களுக்கு முறையாக நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.
தமிழகம் போன்ற மாநிலங்கள் அதிக அளவு வரிப்பணத்தை விட்டுத் தருவதாக கூறிய அவர், தமிழகத்திற்கு 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை வரவேண்டி உள்ளதாக குறிப்பிட்டார். கொரோனா காலகட்டத்தில் உயிர்க்காக்கும் பொருட்களுக்கு சில மாதங்கள் ஆவது வரி விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளதாக தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.