தாமதமாக தாக்கல் செய்யப்படும் ஜிஎஸ்டி வரிக்கு அபராதம் ரத்து!
ஜி.எஸ்.டி. வரி கணக்கை தாமதமாக தாக்கல் செய்தால் விதிக்கப்படும் அபராத தொகையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
கடந்த ஜுலை மாதம் முதல் இந்தியாவில் ஜி.எஸ்.டி. வரி முறை அமலுக்கு வந்தது. இந்த வரி முறையில் குறிப்பிட்ட நாட்களுக்குள் வரிக்கான கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றால் ஒரு நாளைக்கு சி.ஜி.எஸ்.டிக்கு ரூ 100 மற்றும் எஸ்.ஜி.எஸ்.டிக்கு ரூ 100 என மொத்தம் 200 ரூபாய் வீதம் அபாராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஜூலை மாதத்திற்கான கணக்கை தாக்கல் செய்ய கடந்த ஆக., 25ம் தேதி கடைசி நாளாக நிர்ணயக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜி.எஸ்.டியில் பதிவு செய்திருந்த சுமார் 50 லட்சம் பேரில் கடந்த ஆக.,29ம் தேதி வரை 30 லட்சத்து 83 ஆயிரம் பேர் மட்டுமே கணக்கை தாக்கல் செய்திருந்தனர். மற்ற 20 லட்சம் பேர் அபராதத்தை சந்திக்கும் சூழ்நிலை உருவானது.
இந்நிலையில் நாட்டின் ஜி.எஸ்.டிக்கான முதல் கணக்கை தாக்கல் செய்யாதவர்களுக்கு அபாராத்தில் இருந்து விலக்கு அளிக்கலாம் என ஜி.எஸ்.டி. கவுன்சில் பரிந்துரைத்திருந்தது. இதை ஏற்று மத்திய அரசு அபராத தொகையை ரத்து
செய்துள்ளது. எனினும் தாமத தாக்கலுக்கான வட்டியை வரி செலுத்துவோர் கட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.