ஆயுள் காப்பீடு தொகை விவகாரத்தில் பாலிசிதாரரின் தொகையை இணையாக உரிமை கோருபவர்கள் 25 ஆண்டுகள் வரை பெற்றுக்கொள்ள வழிவகை உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
காப்பீட்டுத் தொகை பாலிசிதாரர்களால் கோரபடாத நிலையில் அந்தத் தொகை வட்டியுடன் மூத்த குடிமக்கள் (Senior Citizen) நலநிதிக்கு மாற்றப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது உண்மையா என மக்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கரத், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் தகவலின்படி உரிமை கோரப்படாத கணக்குகளில் உள்ள தொகையை பாலிசிதாரர்கள் அல்லது அவர்களுக்கு இணையாக உரிமை கோருபவர்கள் பாலிசித்தொகை வேண்டி கோரிக்கை வைக்கும் பட்சத்தில் அவை சுமுகமான முறையில் வழங்கப்படுவதாகவும், அதே நேரத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோரப்படாத தொகையை இந்திய காப்பீட்டு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் மூத்த குடிமக்கள் நல நிதிக்கு வட்டியுடன் மாற்றுவதாகவும் அதற்குப் பிறகும் பாலிசிதாரர் 25 ஆண்டுகளுக்குள் தொகை மீது உரிமை கோரும் பட்சத்தில் அவை வழங்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோரப்படாத கணக்குகளில் உள்ள தொகையாக, 2017-2022ஆம் நிதியாண்டில் ஆயுள் காப்பீட்டின் கீழ் பாலிசிதாரர்களால் கோரப்படாத தொகையாக 1498.1 கோடி ரூபாயும், ஆயுள் காப்பீடு அல்லாத பாலிசிதாரர்களின் கோரப்படாத தொகையான 225.13 கோடி ரூபாய் என மொத்தம் 1723.2 கோடி ரூபாய் மூத்த குடிமக்கள் நல வாரியத்துக்கு இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையத்தால் மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.