தங்கத்திற்கான கடன் தொகையை உயர்த்தியது மத்திய கூட்டுறவு வங்கி
மத்திய கூட்டுறவு வங்கியில் தங்கத்திற்கான கடன் தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், மத்திய கூட்டுறவு வங்கியில் ஒரு கிராம் தங்கத்திற்கு வழங்கப்படும், கடன் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் வங்கிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், சந்தையில் தங்க நகையின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், நகைகளுக்கு கிராம் ஒன்றுக்கு வழங்கப்படும் கடன் தொகை இரண்டாயிரத்து 600 ரூபாயிலிருந்து, தற்போது இரண்டாயிரத்து 800 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு கிராம் தங்க நகையின் கடன் தொகை அல்லது தங்க நகையின் தினசரி சந்தை மதிப்பில் 75 சதவீதம் ஆகும்.
இதில் எது குறைவோ அத்தொகையினை கடனாக வழங்க வேண்டும் என வங்கியின் கிளை மேலாளர்களுக்கு சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நாளை முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய கூட்டுறவு வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

