'கிரேட் லேர்னிங்' நிறுவனத்தை 60 கோடி டாலருக்கு வாங்கியது பைஜூ'ஸ்

'கிரேட் லேர்னிங்' நிறுவனத்தை 60 கோடி டாலருக்கு வாங்கியது பைஜூ'ஸ்

'கிரேட் லேர்னிங்' நிறுவனத்தை 60 கோடி டாலருக்கு வாங்கியது பைஜூ'ஸ்
Published on

இந்தியாவின் அதிக சந்தை மதிப்பு உடைய ஸ்டார்ட் அப் நிறுவனமன பைஜூ'ஸ், கல்வித் துறையில் உள்ள பல நிறுவனங்களை வாங்கி வருகிறது. தற்போது 'கிரேட் லேர்னிங்' என்னும் நிறுவனத்தை 60 கோடி டாலர் கொடுத்து வாங்கி இருக்கிறது. இந்த நிறுவனம் சிங்கப்பூரை தலைமையாக கொண்டு செயல்படும் நிறுவனமாகும்.

சில மாதங்களுக்கு முன்பு கோச்சிங் நிறுவனமான ஆகாஷ் நிறுவனத்தை 100 கோடி டாலர் கொடுத்து வாங்கியது பைஜூ'ஸ். கடந்த வாரம் அமெரிக்காவை தலைமையாக கொண்டு செயல்பட்டுவந்த 'எபிக்' என்னும் நிறுவனத்தை 50 கோடி டாலர் கொடுத்து வாங்கியது.

தற்போது 'கிரேட் லேர்னிங்' நிறுவனத்தை வாங்கி இருக்கிறது பைஜூ'ஸ். இந்த நிறுவனம் உயர் கல்வி மற்றும் புரஃபஷனல்கள் தங்களது திறமையை வளர்த்துக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனமாகும். இந்த நிறுவனம் சிங்கப்பூரில் தொடங்கப்பட்டது என்றாலும் இந்தியா உள்ளிட்ட 160-க்கும் மேற்பட்ட நாடுகளில் சேவை வழங்குகிறது. ஸ்டார்ட் அப் துறையில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் வென்ச்சர் கேபிடல் நிதியுடன் தொடங்கப்பட்டவையாகும். ஆனால், 'கிரேட் லேர்னிங்' எந்த விதமான முதலீட்டையும் திரட்டவில்லை. இந்த நிறுவனத்தில் 1,500 பணியாளர்கள் உள்ளனர். அவர்கள் இனி பைஜூ'ஸ் பணியாளர்களாக மாறுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், இதே துறையில் நிறுவனங்களை வாங்குவதற்கு சுமார் 40 கோடி டாலர் ஒதுக்கப்பட்டுள்ளதாக பைஜூ'ஸ் தெரிவித்திருக்கிறது.

பைஜூ'ஸ் குழுமத்தின் ஓர் அங்கமாக 'கிரேட் லேர்னிங்' நிறுவனம் திகழும். இந்தியா, வட அமெரிக்கா மற்றும் கனடா சந்தையின் வளர்ச்சியில் இந்த நிறுவனம் கவனம் செலுத்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.

'கிரேட் லேர்னிங்' நிறுவனத்தை கையகப்படுத்தியன் மூலமாக கல்வித் துறையில் அனைத்து வகையிலும் செயல்பட்டுவருகிறோம் என நிறுவனர் ரவீந்திரன் தெரிவித்திருக்கிறார். பள்ளிக் குழந்தைகளின் கல்வி, நுழைவுத்தேர்வு பயிற்சி, உயர் கல்வி மற்றும் திறனை வளர்த்துக்கொள்ளுதல் என அனைத்து இடங்களிலும் பைஜூ'ஸ் செயல்படுகிறது.

அதேபோல மும்பையை சேர்ந்த 'டாப்ப்ர்' (Toppr) நிறுவனத்தையும் 15 கோடி டாலர் கொடுத்து பைஜூஸ் வாங்கி இருக்கிறது. 2021-ம் ஆண்டு மட்டும் சர்வதேச அளவில் செயல்பட்டுவரும் ஆறு முக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களை பைஜூஸ் வாங்கி இருக்கிறது. இதற்காக 220 கோடி டாலர் அளவுக்கு செலவு செய்திருக்கிறது. இதுவரை மொத்தமாக 15 ஸ்டார்ட் அப் நிறுவனங்களை பைஜூ'ஸ் வாங்கி இருக்கிறது.

பெரிய ஸ்டார்ட் அப்: பைஜூ'ஸ் நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பு 150 கோடி டாலர் நிதியை திரட்டியது. யுபிஎஸ் குழுமம், பிளாக் ஸ்டோன் குழுமம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் முதலீடு செய்தன. அப்போது பைஜூ'ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1,650 கோடி டாலராக இருந்தது. பேடிஎம் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1600 கோடி டாலர்கள் மட்டுமே. இன்னும் இரண்டு ஆண்டுகளில் பைஜூ'ஸ் ஐபிஓ வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com