மத்திய பட்ஜெட் 2025 - 26 | 1.70 லட்சம் விவசாயிகளுக்கு புதிய திட்டம்!
2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வேளாண் துறைக்கென பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. அதில், வேளாண் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், பிரதம மந்திரி தன் தான்ய கிரிஷி யோஜனா என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுடன் இணைந்து செயல்படுத்தப்படவுள்ள இந்த திட்டத்தின் மூலம், வேளாண் உற்பத்தி குறைவாக உள்ள 100 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், நாடு முழுவதும் 1 கோடியே 70 லட்சம் விவசாயிகள் பயன்பெறவுள்ளனர். கிசான் கடன் அட்டைகள் மூலம் கடன் பெறுவதற்கான உச்ச வரம்பு 3 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏழரை கோடி விவசாயிகள் பயன்பெறுவர். பருத்தி உற்பத்தியை அதிகரிக்க 5 ஆண்டுகளுக்கான சிறப்பு திட்டமும், துவரம், உளுந்து, மசூர் பருப்பு உற்பத்தியில் சிறப்பு கவனம் செலுத்த 6 ஆண்டுகளுக்கு சிறப்பு திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திறன் மேம்பாடு, முதலீடுகள், தொழில்நுட்பம் மூலம் வேளாண் துறையில் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்த, மாநில அரசுகளுடன் சேர்ந்து புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.