மத்திய பட்ஜெட் 2025 - 26 | 36 வகையான மருந்துகளுக்கு முற்றிலும் வரிவிலக்கு!
புற்றுநோய், அரிய வகை நோய்கள் உள்ளிட்டவற்றின் சிகிச்சைக்கு தேவைப்படும் 36 வகையான மருந்துகளுக்கு முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்படுவதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இது தவிர 6 வகையான உயிர் காக்கும் மருந்துகளுக்கு சுங்க வரி 5% ஆக குறைக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மின்சார வாகன பேட்டரி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் 35 வகையான பொருட்களுக்கும் மொபைல் ஃபோன் பேட்டரி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் 28 வகையான பொருட்களுக்கும் 100% வரி விலக்கு அளிக்கப்படுவதாக அமைச்சர் அறிவித்தார். லித்தியன் அயன் பேட்டரி கழிவுகள், காரீீயம், துத்தநாகம், கோபால்ட் பவுடர் உள்ளிட்ட 12 கனிமங்களுக்கு முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்படும் என அமைச்சர் கூறினார்.
கதிர் இல்லாத தறிகளுக்கும் முழு வரி விலக்கு அளிக்கப்படுவதாகவும் குறிப்பிட்ட வகை பின்னலாடைகளுக்கான வரி விகிதம் திருத்தியமைக்கப் படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். எல்சிடி, எல்இடி திரைகளுக்கான மூலப்பொருளான ஓபன் செல்லுக்கும் 100% இறக்குமதி வரி விலக்கு அளிக்கப்படுவதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. வெட் புளூ தோலுக்கு 100% வரி விலக்கு அளிக்கப்படும் நிலையில் உறைந்த நிலையில் உள்ள மீன் பேஸ்டுக்கு வரி 30இல் இருந்து 5% ஆக குறைக்கப்படும் எனவும் அமைச்சர் அறிவித்தார். மீன் மற்றும் இறால்களுக்கான உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் ஹைட்ரோசிலேட் மூலப்பொருள் வரி 15இல் இருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.