பிரதமர் பாதுகாப்பு | ஒரு மணி நேரத்திற்கு ரூ.5.58 லட்சம்.. SPGக்கு ரூ.489 கோடி ஒதுக்கீடு!
நடப்பு நிதி ஆண்டுக்கான (2025 -26) மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (பிப்.1) தாக்கல் செய்தார். அதில் பல்வேறு துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, பிரதமரைப் பாதுகாக்கும் பணியை மேற்கொள்ளும் எஸ்பிஜி எனப்படும் சிறப்புப் பாதுகாப்புப் படைக்கு ரூ.489 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இது, கடந்த ஆண்டைவிட சுமார் ரூ.22 கோடி குறைவாக உள்ளது.
2024-25ல், திருத்தப்பட்ட பட்ஜெட் ரூ.510.97 கோடியாக இருந்தது. அதாவது பிரதமரின் பாதுகாப்பிற்கு ஒருநாளுக்கு ரூ.1.34 கோடி செலவிடப்படுகிறது. இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு மணி நேரத்திற்கு ரூ.5.58 லட்சமும், ஒரு நிமிடத்திற்கு 9,303 ரூபாயும் செலவிடப்படுகிறது.
நாட்டின் பிரதமரின் பாதுகாப்பை உள்நாடு மற்றும் வெளிநாட்டில் உறுதி செய்யும் வகையில் சிறப்பு பாதுகாப்புக் குழு (Special Protection Group) இயங்கி வருகிறது. 1985ஆம் ஆண்டு இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு ராணுவத்தின் ஒரு பிரிவினரால் எஸ்பிஜி படை அமைக்கப்பட்டது.
தற்போதைய நிலவரப்படி, இந்த எஸ்பிஜி பாதுகாப்பில் பிரதமர் மோடி மட்டுமே உள்ளார். இதற்கிடையில் எஸ்பிஜி பனியில் சுமார் 3,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.