பட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்?

பட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்?
பட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்?
Published on

எதிர்வரும் மத்திய பட்ஜெட்டில் அரசு வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கான முதல் படியை மத்திய அரசு எடுக்கும் என நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய பட்ஜெட் பிப்ரவரில் 1-ல் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, வறுமை அதிகரிப்பு என பல்வேறு சூழல்களுக்கு மத்தியில் பட்ஜெட் தாக்கல் நடைபெற இருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, இந்த பட்ஜெட்டில் பொதுத்துறை வங்கிகளில் சிலவற்றை தனியார்மயமாக்குவதற்கான முதல் படியை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, 13 பொதுத்துறை வங்கிகளையும், ஸ்டேட் வங்கியின் இணை வங்கிகளையும் ஒன்றாக இணைத்த பின்னர் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வங்கித் துறையில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சீர்திருத்தங்களை விரைவுபடுத்தும் முயற்சியில், மத்திய அரசு சில அரசு வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கான முதல் படியை எடுக்கும் என்று இப்போது எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது தற்போதைய அரசின் அடுத்ததடுத்த முயற்சியாக உள்ளது.

``அரசுக்கு சொந்தமான வங்கிகளின் எண்ணிக்கையை நான்காக குறைப்பதற்கான அரசாங்கத்தின் இறுதி நோக்கத்தின் ஒரு பகுதியாக விருப்பங்கள் பரிசீலிக்கப்படுகின்றன. மீதமுள்ள சில சிறிய வங்கிகளில் நான்கு பெரிய வங்கிகளில் ஒன்றில் ஒன்றிணைவதும், சிறிய கடன் வழங்குபவர்களில் சிலரை தனியார்மயமாக்குவதும் இதில் அடங்கும்" என்று நிதி அமைச்சகத்தின் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

2020-ஆம் ஆண்டில் 10 பொதுத்துறை வங்கிகள் நான்காக இணைக்கப்பட்ட நிலையில், இப்போது இந்தியாவில் 12 பொதுத்துறை வங்கிகள் உள்ளன. இணைப்பின் ஒரு பகுதியாக இல்லாத சில வங்கிகள் பாங்க் ஆப் இந்தியா, யூகோ வங்கி, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் பஞ்சாப் & சிந்து வங்கி ஆகியவை.

``இந்த 12 வங்கிகளில் ஒரு சில வங்கிகளில் தனியார்மயமாக்கலுக்கும், ஒரு சில வங்கிகளில் நான்கு பெரிய வங்கிகளுடன் இணைந்துகொள்ளவும் சம்மதித்துள்ளன. மீதமுள்ள வங்கிகள், இரண்டாம் நிலை சந்தையில் விற்பனை செய்வதன் மூலம் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் அரசாங்கம் அதன் பங்குகளை படிப்படியாகக் குறைக்கும்'' என்று நிதி அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் கனரா வங்கி ஆகியவை முந்தைய சுற்று இணைப்புகளுக்குப் பிறகு அரசுக்கு சொந்தமான நான்கு பெரிய வங்கிகளாகும். மேலும், அவை அரசுக்கு சொந்தமான அடையாளத்தை தக்க வைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com