பட்ஜெட் 2021 பார்வை: வருமான வரி செலுத்துவோரை அரசு 'ஏமாற்றியது' ஏன்?

பட்ஜெட் 2021 பார்வை: வருமான வரி செலுத்துவோரை அரசு 'ஏமாற்றியது' ஏன்?

பட்ஜெட் 2021 பார்வை: வருமான வரி செலுத்துவோரை அரசு 'ஏமாற்றியது' ஏன்?
Published on

கடந்த சில ஆண்டுகளாக வருமான வரி தொடர்பான சலுகைகளை நடுத்தர மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், வழக்கம் போல இந்த ஆண்டும் மத்திய அரசு ஏமாற்றிவிட்டது.

கோவிட் காரணமாக நடுத்தர மக்களின் வருமானம் பெருமளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால், வரிச்சலுகைகள் மூலமாக கூடுதல் தொகை நடுத்தர மக்கள் வசம் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு இந்த பட்ஜெட்டில் அறிவிக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேரடி வரி பிரிவில் எந்த ஒரு முக்கிய அறிவிப்பையும் மத்திய அரசு செய்யவில்லை.

இதுவரை ஆண்டுக்கு 2.50 லட்ச ரூபாய் வருமானத்துக்கு வருமான வரி விலக்கு உண்டு. இந்த தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதுவும் நடக்கவில்லை.

அதேபோல 80சி பிரிவின் கீழ் ஆண்டுக்கு 1.5 லட்ச ரூபாய் முதலீடு செய்யும் பட்சத்தில் அந்தத் தொகைக்கு வரிவிலக்கு பெற்றுக்கொள்ள முடியும். இதுபோல, முதலீடுகள் மீதான தொகையும் ரூ.2 லட்சத்துக்கு மேல் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தப் பிரிவிலும் மத்திய அரசு எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.

அதேவேளையில், பெரும் பணக்காரர்களுக்கு வெல்த் டாக்ஸ் மற்றும் கொரோனாவை சமாளிக்க கொரோனா செஸ் போன்றவை விதிக்கப்படும் என்ற கணிப்பும் இருந்தது. ஆனால், மத்திய அரசு இதுபோல கூடுதல் வரியை விதிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.

அதேபோல 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் பென்ஷன் மற்றும் வங்கி வட்டியை மட்டும் நம்பி இருப்பவர்கள் வருமான வரித் தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக பொருளாதார பேராசரியர்களிடம் பேசியபோது, "தனிநபர்கள் எப்படி வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள், அதே நெருக்கடி அரசுக்கும் இருக்கிறது. நாட்டில் தேவையை ஊக்குவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துவருகிறது. அதனால் அரசின் நிதிப்பற்றாக்குறை தொடர்ந்து அதிகமாக இருக்கிறது.

கடந்த ஆண்டு பட்ஜெட்டின் போது 3.5 சதவீத நிதிப்பற்றாக்குறைக்கு (ஜிடிபியில்) மட்டுமே மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்தது. ஆனால் கோவிட் காரணமாக தேக்க நிலை இருந்தது. அரசுக்கு வருமானம் குறைந்த அதேவேளையில் செலவும் செய்ய வேண்டி இருந்ததால் நடப்பு நிதி ஆண்டில் நிதிப்பற்றாக்குறை 9.5 சதவீதம் (ஜிடிபியில்) இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

நாட்டின் வருமானத்துக்கும் செலவுக்கும் உள்ள இடைவெளியே நிதிப்பற்றாக்குறை.

அடுத்த நிதி ஆண்டிலும் நிதிப்பற்றாக்குறை 6.8 சதவீதம் அளவுக்கு இருக்கும் என்றே கணிகப்பட்டிருக்கிறது. அதனால் வருமானத்தை குறைக்கும் வகையிலான நடவடிக்கைகளை அரசு எடுக்காததில் ஆச்சர்யம் ஏதும் இல்லை" என தெரிவித்தார்.

நிதிப்பற்றாக்குறை இலக்கு மூன்று சதவீதத்துக்குள் இருக்க வேண்டும் என கடந்த 2003-ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. ஆனால், எதேனும் ஒரு காரணத்துக்காக இந்த இலக்கு இன்னும் எட்டப்படாமலே இருக்கிறது. இன்னும் சுமார் 4 நிதி ஆண்டுகளுக்கு இதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.

- வா.கா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com