பட்ஜெட் 2021: மூத்த குடிமக்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள்!
ஓய்வூதியம் மற்றும் வட்டி வருமானம் மட்டும் உள்ள 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வருமானவரி தாக்கலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த 2021 - 22 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், வரிச்சலுகைகள் சார்ந்த அம்சங்கள்:
"கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் அமையும் புதிய உலக அரங்கில் இந்தியா முன்னிலை வகித்து முக்கிய பங்காற்றும். இந்தச் சூழலில், நமது வரி முறைகள், வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், வரி முறைகள், வரி செலுத்துவோருக்கு குறைந்த சுமையாகவும் இருக்க வேண்டும். வரி செலுத்துவோர் மற்றும் பொருளாதார நலனுக்காக, பெரு நிறுவனங்களின் வரி குறைப்பு உட்பட மத்திய அரசு பல சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 6.48 கோடியாக உயர்ந்தது. இது கடந்த 2014ம் ஆண்டில் 3.31 கோடியாக இருந்தது.
மூத்த குடிமக்களுக்கான சலுகை: இந்த மத்திய நிதி நிலை அறிக்கையில், மூத்த குடிமக்களுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. 75-வது சுதந்திர ஆண்டில், 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வரித்தாக்கல் சுமையை குறைக்க, இந்த நிதிநிலை அறிக்கையில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஓய்வூதியம் மற்றும் வட்டி வருமானம் மட்டும் உள்ள, 75 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வருமானத்தில் தேவையான வரியை, ஓய்வூதியம் வழங்கும் வங்கிகளே பிடித்தம் செய்து கொள்ளலாம்.
மலிவு விலை வீடுகள்/வாடகை வீடுகளுக்கான சலுகைகள்: வருமானவரி கணக்கு தாக்கலின் போது, மலிவு விலை வீடுகளுக்கான கடனில் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வட்டிக்கு வருமானத்தில் இருந்து விலக்கு அளிக்கும் சலுகை 2022, மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மலிவு விலை வீடுகள் கட்டுவதை ஊக்குவிப்பதற்காக, இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், புலம் பெயர் தொழிலாளர்களுக்கான மலிவு விலை வாடகை வீடுகள் கட்டப்படுவதை ஊக்குவிக்க, மலிவு விலை வாடகை வீடு திட்டங்களுக்கு புதிய வரி விலக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு வரி சலுகைகள்: நாட்டில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக, ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு 2022 மார்ச் 31ம் தேதி வரை, விற்பனை வரி குறைப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் முதலீட்டை ஊக்குவிக்க, அந்த நிறுவனங்களுக்கான முதலீட்டுக்கு, மூலதன ஆதாய விலக்கு 2022 மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
தொழிலாளர் நல நதிக்கான பங்களிப்பு குறித்த நேரத்தில் செலுத்த வேண்டும்
பல்வேறு நல திட்டங்களில் தொழிலாளர்களின் பங்களிப்பை, வேலை அளிக்கும் நிறுவனங்கள் தாமதமாக செலுத்துவதால், தொழிலாளர்களுக்கு நிரந்தர வட்டி/ வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனால், தொழிலாளர்களின் பங்களிப்பை, வேலை அளிக்கும் நிறுவனங்கள் தாமதமாக செலுத்த அனுமதிக்கப்படாது.
வருமான வரி கணக்கை மீண்டும் சரிபார்ப்பதற்கான கால வரம்பு குறைப்பு: வருமான வரி கணக்கு தாக்கலை மீண்டும் சரிபார்ப்பதற்கான காலம் தற்போது 6 ஆண்டுகளாக உள்ளது. இது இந்த நிதிநிலை அறிக்கையில் 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு வழக்குகளில் ஓராண்டில், ரூ.50 லட்சம் அல்லது அதற்கு மேல் வருவாய் ஆதாரங்கள் மறைக்கப்பட்டிருந்தால், 10 ஆண்டுகள் வரை அந்த வருமானவரி கணக்கை மறு ஆய்வு செய்ய முடியும். ஆனால் இதற்கு முதன்மை தலைமை ஆணையரின் ஒப்புதல் பெற வேண்டும்.