
ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி என்பது அதன் வாடிக்கையாளர்களை அணுகும் முறையில்தான் அமைந்துள்ளது. ஆனால் அதை கார்ப்பரேட் நிறுவனங்கள் அறவே கவனிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் உண்டு. இந்த நிலையில் பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றம் இளைஞர் ஒருவருக்கு ஆதரவாக ஆப்பிள் நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த மாநிலத்தில் உள்ள சிக்கமங்களூரு நகரை சேர்ந்த 26 வயது இளைஞரான அதிக் அஞ்சுமுக்கு பஹ்ரைனில் வசிக்கும் அவரது சகோதரர் சுமார் 92,000 ரூபாய் மதிப்புள்ள ஆப்பிள் போனை கடந்த 2018-இல் பரிசாக வழங்கியுள்ளார். தொடர்ந்து 2019 மே மாதத்தில் அஞ்சும் அந்த போனுக்கு கூடுதல் உத்தரவாதம் பெறுவதற்காக 4500 ரூபாய் செலுத்தி தனது போனுக்கான வாரண்டியை 2020 ஆகஸ்ட் வரை நீட்டித்துள்ளார். இருந்தும் அந்த போனில் ஜூலை (2019) வாக்கில் டச் (தொடுதிரை) மற்றும் ஸ்ப்பீக்கர்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
அதனை சீர் செய்யும் நோக்கில் தனது வசிப்பிடத்தில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டருக்கு சென்றுள்ளார் அவர். அன்றைய தினம் அந்த போனிலிருந்த சிக்கலை ஆப்பிள் டெக்னீஷியன்கள் சரி செய்துள்ளனர். இருந்தும் அடுத்த நாள் வேறொரு சிக்கல். அதற்கடுத்த நாள் வேறொரு சிக்கலும் எழுந்துள்ளது. அதனால் போனை முறையாக சரி செய்து கொடுக்கும்படி ஆப்பிள் சர்வீஸ் சென்டரை அஞ்சும் அணுகியுள்ளார்.
பின்னர் போனை பார்த்த ஆப்பிள் டெக்னீஷியன்கள் அதனை சீர் செய்ய 59000 ரூபாய் செலவாகும் என தெரிவித்துள்ளனர். மேலும் அது வாரண்டியில் வராது என சொல்லியுள்ளனர். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வாரண்டியில் உள்ள தனது போனை சர்வீஸ் செய்து கொடுக்க பணம் கேட்ட ஆப்பிள் நிறுவனத்தின் மீதும், சம்பந்தப்பட்ட சர்வீஸ் சென்டர் மீதும் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். நடந்த சம்பவத்தை அவர் நீதிமன்றத்தில் விவரித்துள்ளார்.
அதை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் அஞ்சுமுக்கு அதே போனை புதிதாக ஆப்பிள் நிறுவனம் வழங்க வேண்டும். அதை செய்ய தவறும் பட்சத்தில் அந்த போனுக்கான தொகை 92,000 ரூபாய் மற்றும் அதற்கான வட்டியை தர வேண்டும். அதோடு நீதிமன்ற செலவு பத்தாயிரம் ரூபாயும், அஞ்சுமுக்கு அலச்சல் ஏற்படுத்த காரணத்தால் பாத்தாயிரம் ரூபாயும் வழங்குமாறு ஆப்பிளுக்கு உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.