”வொர்க் ஃப்ரம் ஹோமால் ஒவ்வொரு ஊழியரும் மாதம் ரூ.5 ஆயிரம் சேமிக்கிறார்கள்” ஆய்வில் தகவல்
கொரோனா நோய்த்தொற்று பொதுமுடக்கம் காரணமாக பெரும்பாலான பணியாளர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்து வருகின்றனர், வீட்டிலிருந்தே வேலை செய்வதால் ஒவ்வொருவருக்கும் பயண நேரத்தில் தினமும் கிட்டத்தட்ட 2 மணிநேரம் மிச்சமாவதாகவும். ஒவ்வொரு மாதத்திற்கும் உணவு, உடை, பயணசெலவுகளுக்காக சுமார் 5 ஆயிரம் ரூபாய் சேமிக்கப்படுவதாகவும் அவ்பிஸ் என்ற நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
இந்த பணியாளர்களில் 74% பேர் தங்கள் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துவதால் தொடர்ந்து வீடுகளிலிருந்து வேலை செய்யத் தயாராக உள்ளனர் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வீட்டிலிருந்தே வேலை செய்வதால் 20% பேர் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 5000 முதல் 10,000 வரை சேமிக்கிறார்கள், 19% ரூபாய் 10,000 க்கு மேல் சேமிக்கிறார்கள்."இந்தியா போன்ற அதிக செலவு கொண்ட நாட்டில், வீட்டிலிருந்து வேலை செய்வதன் மூலம் இவ்வளவு அதிக தொகை சேமிக்கப்படுகிறது. சராசரியாக, ஒரு ஊழியர் மாதத்திற்கு 5,520 ரூபாய் சேமிக்கிறார், இது முன்பு உணவு, பயணம்,ஆடை போன்றவற்றுக்காக செலவிடப்பட்டது. இந்த தொகை சராசரி இந்தியரின் சம்பளத்தில் சுமார் 17% ஆகும்”என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.
சுமார் 27% மற்றும் 23% பேர் வீட்டிலிருந்து வேலை செய்யும் போது தனிமை மற்றும் வேலை-வாழ்க்கை சமநிலை சவால்களை எதிர்கொண்டதாக கூறினர். மேலும் குழு உறுப்பினர்களுடனான தொடர்பு இல்லாதது மற்றும் நெட்வொர்க்கிங் பிரச்சினைகள் தங்களின் படைப்பாற்றலை பாதித்தன என்று கூறினர். வீட்டிலிருந்து வேலை செய்யும்போது குறைந்த இணைய வேகம், ஸ்பாட் தொழில்நுட்ப உதவி இல்லாதது போன்ற பிரச்சினைகள் பற்றி பலர் புகார் செய்தனர், மின்சார பில் உயரும் என்றும் சிலர் புகார் கூறினர். பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட 47% பேர் மேசை மற்றும் நாற்காலி இல்லாதது குறித்தும், 71% பேர் வீட்டில் ஒரு பிரத்யேக வேலை செய்யும் பகுதியின் தேவை குறித்தும் பேசினார்கள்.
வீட்டிலிருந்தே வேலை செய்வது பிரபலமாக இருப்பதற்கு மற்றொரு காரணம் பயண நேரம் மிச்சமாவதுதான். ஒவ்வொருவரும் தினமும் 2 மணி நேரம் வரை பயணம் செய்வதாக சொல்லியுள்ளனர். இது ஒரு வருடத்தில் 44 கூடுதல் வேலை நாட்களுக்கு சமமாகும். ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஏழு இந்திய மெட்ரோ நகரங்களில் 1,000 மாதிரி அளவுகளுடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.