’இனி இதெல்லாம் கட்’ - சிக்கலில் இன்னொரு ஸ்டார்ட்அப்.. அன்அகாடமிக்கு என்ன பிரச்னை?

’இனி இதெல்லாம் கட்’ - சிக்கலில் இன்னொரு ஸ்டார்ட்அப்.. அன்அகாடமிக்கு என்ன பிரச்னை?
’இனி இதெல்லாம் கட்’ - சிக்கலில் இன்னொரு ஸ்டார்ட்அப்.. அன்அகாடமிக்கு என்ன பிரச்னை?

சமீப காலத்தில் ஸ்டார்ட் அப் உலகில் பெரும் சிக்கல்கள் உருவாகியுள்ளன. குறிப்பாக அன் அகாடமி நிறுவனத்தில் ஏற்பட்டிருக்கும் சிக்கல் மிகவும் பெரியது. இதுவரை சுமார் 1000க்கும் மேற்பட்ட பணியாளர்களை இந்த நிறுவனம் நீக்கி இருக்கிறது. இது சிக்கலின் தொடக்க புள்ளி மட்டுமே.

சில நாட்களுக்கு வ்முன்பு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பணியாளர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் பல சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறார். “இதுவரை நாம் சிக்கனமாக இருந்ததில்லை. ஆனால் அடுத்த இரு ஆண்டுகளில் ஐபிஒ கொண்டு செல்ல வேண்டி இருப்பதால் சிக்க நடவடிக்கை தேவை. இப்போது கூட நம்முடைய வங்கி கணக்கில் ரூ.2800 கோடி ரூபாய்  அளவுக்கு இருக்கிறது. இருந்தாலும் நாம் சிக்கனமாக இருக்க வேண்டியது அவசியம்.” என குறிப்பிட்டிருக்கிறார்.

“இனி மதிய உணவு மற்றும் ஸ்நாக்ஸ் கிடையாது. பணியாளர்கள் மற்றும் பயிற்று விற்பனர்களுக்கு  போக்குவரத்துக்காக பல கோடி ரூபாய் அளவுக்கு செலவு செய்கிறோம். சில சமயங்களில் அந்த செலவு தேவையில்லாததாக அமைந்துவிடுகிறது. அதனால் போக்குவரத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அதனால் இனி யாருக்கும் பிஸினஸ் கிளாஸ் பயணம் கிடையாது. நிறுவனர், தலைமைச் செயல் அதிகாரி, நிர்வாக குழு என யாருக்கும் பிஸினஸ் வகுப்பு பயணம் கிடையாது.

உயரதிகாரிகளுக்கு வழக்கப்படும் பிரத்யேக டிரைவர்கள் கிடையாது. உயரதிகாரிகள் மற்றும் நிறுவனர்களுக்கு சம்பளத்தில் பிடித்தம் இருக்கும். சில முக்கியமில்லாத தொழில்களில் இருந்து வெளியேறுகிறோம். கடந்த மூன்று ஆண்டுகளாக ஐபிஎல் ஸ்பான்ஸராக அன் அகாடமி இருந்தது. ஆனால் அடுத்த ஆண்டு இருக்காது” என தலைமைச் செயல் அதிகாரி அறிவித்திருக்கிறார். மேலும் அனைத்துவிதமான ஸ்பான்ஸர்ஷிப்களும் நிறுத்தப்படும் என தெரிகிறது.

என்ன காரணம்?

கோவிட் உச்சத்தில் இருந்தபோது ஆன்லைன் மூலம் கல்வி என்பது எளிதாக இருந்தது. ஆனால் தற்போது நேரடி வகுப்புகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மற்றொரு முக்கிய நிறுவனமான பைஜூஸ் நேரடி வகுப்புகளில் களம் இறங்கி இருக்கிறது. ஹைபிரிட் மாடல் பிரபலமாகி வரும் சூழலில் ஆன்லைன் மட்டுமே என்பதால் அன்அகாடமிக்கு சிக்கல்கள் உருவாகியுள்ளன.

மேலும் கோவிட்டுக்கு பிறகு பல சிறிய நிறுவனங்களை அன்அகாடமி வாங்கியது. 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வாங்கப்பட்டன. கிட்டத்தட்ட எஜுடெக் பிரிவில் ஒரு சூப்பர் ஆப் உருவாக்கலாம் என்னும் திட்டத்தில் இவை வாங்கப்பட்டதாக தெரிகிறது. கணிசமான நிதி நிறுவனங்களை வாங்குவதற்கு செலவளித்துள்ளது. மேலும் சில ஆசிரியர்களை அதிக தொகை கொடுத்து பணியமர்த்தியது.

பிரைவேட் ஜெட்டில் பயணம் செய்தது, சொகுசு ஓட்டல்களில் மாதக் கணக்கில் தங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் நிறுவனர்கள் மீது உள்ளது. அன்அகாடமியும் ஆப்லைன் வகுப்புகளுக்கு தயாராகி வருவதாகவும், அதற்கு தேவையான நிதி திரட்டுவது சவாலாக இருப்பதால் சிக்கன நடவடிக்கைக்கு மாறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்டார்ட் அப் உலகின் அனைத்து கவனமும் எஜுடெக் நிறுவனங்கள் மீது திரும்பியுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com