‘அமேசான் இந்தியா’இணையதளத்திலிருந்து சில பொருட்கள் அதிரடி நீக்கம்
அமேசான் இந்தியா இணையதளத்திலிருந்து சில விற்பனைப் பொருட்கள் நீக்கப்பட்டுள்ளது.
இணையதள விற்பனையில் அமேசான், ஃபிலிப்கார்ட் ஆகியவை அதிக அளவிலான இந்தியா வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இந்த இணையதளங்களில் வாடிக்கையாளர்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து கொண்டே அனைத்து வகையான பொருட்களையும் வாங்க முடியும். இதனால் இந்த இணையதளங்களுக்கு மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு புதிய இணையதள விற்பனை விதிகளை அமல்படுத்தியிருக்கிறது. இதற்கேற்ப அமேசான் நிறுவனம் தனது இந்திய இணையதளத்திலிருந்து சில பொருட்களை நீக்கியுள்ளது.
இந்தியாவின் புதிய இணையதள விற்பனை விதிகள் ஆன்லைனில் விற்பனை செய்யும் பொருட்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி ஆன்லைன் விற்பனையில் இயங்கும் நிறுவனம் ஒன்று, அவர்களின் பங்குகளை வைத்துள்ள நிறுவனங்களின் பொருட்களை விற்க முடியாது.
அதேபோல அவர்கள் பிரத்யேக ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்களின் பொருட்களையும் இனிமேல் அவர்களின் சொந்த இணையதளத்தில் விற்கமுடியாது.
இதன்படி அமேசான் நிறுவனம் தனது பங்கு இருக்கும் நிறுவனங்களான க்ளவுட் டைல், ஷாப்பர்ஸ் ஸ்டாப் போன்றவற்றின் பொருட்களை தனது இணையதளத்திலிருந்து நீக்கியிருக்கிறது. மேலும் அமேசான் நிறுவனத்தின் எக்கோ ஸ்பீக்கர்கள், வீட்டு உபயோக சுத்திகரிப்பு பொருட்கள், பேட்டரிகள் போன்றவை அமேசான் இணையதள விற்பனையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமேசான் நிறுவனத்தின் அதிகாரிகள் “எங்கள் நிறுவனம் புதிய இணையதள விற்பனை விதிகளுக்கு கட்டுப்பட்டே இந்தப் பொருட்களை நீக்கியுள்ளதாக ”என்று தெரிவித்துள்ளனர்.