பணம் பண்ண ப்ளான் B -19: கார் வாங்க போகிறீர்களா...? இதையும் கவனிங்க

பணம் பண்ண ப்ளான் B -19: கார் வாங்க போகிறீர்களா...? இதையும் கவனிங்க

பணம் பண்ண ப்ளான் B -19: கார் வாங்க போகிறீர்களா...? இதையும் கவனிங்க
Published on

சில ஆண்டுகளுக்கு முன்பு கார் என்பது சொகுசு பொருளாக இருந்தது. ஆனால் தற்போது கார் என்பது அத்தியாவசியமான பொருளாக மாறி இருக்கிறது. வீடு வாங்குவதற்கு அடுத்து அதிக முக்கியத்துவம் கொடுப்பது காருக்குதான். வாட்ஸ்ஆப் ஸ்டேடஸ் அல்லது ஃபேஸ்புக் போஸ்ட்களில் கார் வாங்கி இருப்பதை சகஜமாக பார்க்க முடியும். சர்வதேச அளவுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கார் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. அதனால் மிகப்பெரிய சந்தை இந்தியாவில் உருவாகும் வாய்ப்பு இருப்பதனால் இந்த சந்தையை பிடிக்க ஒவ்வொரு நிறுவனங்களும் பல யுத்திகளை வகுத்து வருகின்றன.

உங்களின் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ள முடியும், பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தாமல் பிரத்யேக செல்லலாம், உங்களுடைய நேரம் மீதமாகும். தவிர கார் வைத்திருப்பது என்பது status symbol ஆக இருக்கிறது. அவரவர் வசதிக்கு ஏற்ப கார் வைத்திருக்கிறார்கள். குறிப்பாக இந்த பேரிடர் காலத்தில் வீட்டுக்கு அடுத்து காருக்கு முக்கியத்தும் கொடுக்கப்படுகிறது. அதனால் கார் வாங்கலாம் அல்லது வாங்க வேண்டாம் என்பது குறித்து எந்த ஆலோசனை சொல்லப்போவதில்லை. அது அவரவர் விருப்பம். ஆனால் சுற்றுப்புர சூழல் காரணமாக (peer pressure) கடன் வாங்கியாவது கார் வாங்கலாம் என திட்டமிடுபவர்கள் சிலர் இருக்கிறார். அவர்கள் கொஞ்சம் யோசிக்கலாம் என்பதே சொல்ல வருவது.

அதற்காக காரில் செல்ல வேண்டாம், பஸ்ஸில் செல்லுங்கள் பொதுபோக்குவரத்தை பயன்படுத்துங்கள் என்று சொல்லப்போவதில்லை. காரை சொந்தமாக வாங்காமலே, வாடகை கார் மூலமாகவே செல்வது பொருளாதார ரீதியில் எவ்வாறு பயனுள்ளது என்பது குறித்து பார்க்கப்போகிறோம். மிதமிஞ்சிய அல்லது தேவையான பணம் இருப்பவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. இருக்கும் தொகைக்கு கார் வாங்கிவிடுவார்கள். அல்லது சொந்த நிறுவனத்தில் அல்லது வேலை செய்யும் நிறுவனத்தில் கார் கொடுத்திருப்பார்கள்.

ஆனால், ஓரிரு லட்ச ரூபாய் கையில் இருக்கும். சில லட்சம் கடன் வாங்கினால் புதிதாக கார் வாங்கலாம் என திட்டம் வைத்திருப்பார்கள். இவர்களின் நட்பு வட்டத்தில் பலரும் கார் வைத்திருப்பார்கள், இவரின் அடுக்கு மாடி குடியிருப்பில் கார் இல்லாத நபராக இவர் மட்டுமே இருப்பதால் எப்படியாவது கார் வாங்கலாம் என திட்டமிடுவார்கள். கார் வாங்க வேண்டாம் என்பதற்கு சொல்லும் முக்கியமான காரணம், பெரும்பாலானவர்களுக்கு தினசரி பயன்பாடு என்பதே இருக்காது. சில லட்ச ரூபாய் முதலீடு செய்து காரை பார்க்கிங்கில் நிறுத்தி இருப்பார்கள்.

இவர்களின் ஒப்பீடு எப்படி இருக்கும் என்றால் நான்குபேர் உள்ள குடும்பம் சேலத்துக்கோ அல்லது மதுரைக்கோ செல்ல வேண்டும் என்றால் பஸ் டிக்கெட்டே சில ஆயிரங்கள் ஆகும். அதற்கு கார் இருந்தால் அதே தொகைக்கு பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பிவிட்டு ஊருக்கு செல்லலாம் என்று தோன்றும். மேலோட்டமாக பார்த்தால் சரியாக இருப்பதுபோல தோன்றும். ஆனால் கார் வேண்டுமே? சில லட்ச ரூபாய் அளவுக்கு முதலீடு செய்திருக்க வேண்டும், (மேலும் கடனும் இருக்கும்) தவிர ஒவ்வொரு ஆண்டும் இன்ஷூரன்ஸ் செலுத்த வேண்டும், ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்றுக்கு மேல் சர்வீஸ் செய்ய வேண்டி இருக்கும்.

நடுத்தர வருமானம் கொண்டவர்கள் இன்ஷூரன்ஸ் மற்றும் சர்வீஸுக்கு ஆகும் செலவு அளவுக்கு கூட காரை பயன்படுத்தமாட்டார்கள். 7 லட்ச ரூபாய் காருக்கு தோராயமாக 18000 ரூபாய் அளவுக்கு இன்ஷூரன்ஸ் செலுத்த வேண்டி இருக்கும். இந்த தொகை மாடலுக்கு ஏற்ப மாறுபடலாம். ஒவ்வொரு முறை சர்வீஸுக்கு விட்டால் ஆகும் செலவும் சில ஆயிரம் ரூபாய் ஆகும்.

சென்னை போன்ற நகரங்களில் ஓலா உபெர் பயன்பாடு என்பது இயல்பாக மாறிவிட்டது. தற்போது வெளியூர் செல்வதற்கு ஒரு வழிதடத்துக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்கள் வந்துள்ளன. சேலத்தில் இருந்து சென்னை வருவதற்கு மொத்தமாக ரூ.5500 என்னும் அளவில் காருக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உங்களிடம் சொந்தமாக கார் இருந்தாலும் பெட்ரோல் அல்லது டீசல் நிரப்ப வேண்டும், சுங்கச்சாவடிக்கு கட்டணம் செலுத்த வேண்டும். கூடுதலாக சுமார் ரூ.2000 மட்டுமே செலவு செய்யும் பட்சத்தில் கார் இல்லாமாலே அதன் பயனை அனுபவிக்க முடியும். கார் வாங்குவதை தள்ளிப்போட முடியும்.

இதில் சில அசௌகர்யங்கள் இருக்ககூடும். சமயங்களில் கூடுதல் கட்டணம் இருக்கும், நினைத்த நேரத்தில் கார் கிடைக்காமல் போகலாம். சமயங்களில் டிரைவர்கள் போக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அதிக ரிஸ்க் எடுத்து கார் வாங்குவதை விட இது எளிதான வழி. மேலும் சில வாரங்களுக்கு முன்பு குறிப்பிட்டதைபோல கார் என்பது depreciating asset. ஆண்டுகள் செல்ல செல்ல காரின் மதிப்பு குறைந்துகொண்டே இருக்கும்.

கார் வாங்க முடியாத சூழல் இருப்பவர்கள் காரை பற்றி யோசிக்கப்போவதில்லை. பணம் இருப்பவர்கள் எப்படியும் கார் வாங்கிவிடுவார்கள். ஸ்திரமான நிதி சூழல் இல்லாத, பொருளாதார ரீதியில் வளர்ந்து வருபவர்கள் சொந்தமாக கார் இல்லாமலே அதனை பயனை அனுபவிக்க முடிகின்ற சூழல் உருவாகி இருக்கிறது. கார் வாங்க நினைப்பவர்கள் இதனையும் பரிசீலனை செய்யலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com