அலர்ட்: கொரோனா தீவிரம் எதிரொலி: உயருகிறதா காப்பீடு பிரீமியம்?

அலர்ட்: கொரோனா தீவிரம் எதிரொலி: உயருகிறதா காப்பீடு பிரீமியம்?

அலர்ட்: கொரோனா தீவிரம் எதிரொலி: உயருகிறதா காப்பீடு பிரீமியம்?
Published on

கொரோனா அனைத்து விதிகளையும் மாற்றி இருக்கிறது. மருத்துவ காப்பீடு இருப்பவர்களுக்கு, ஆயுள் காப்பீடு இருப்பவர்களுக்கு பிரச்னை இல்லை. ஆனால், தற்போது காப்பீடு நிறுவனங்கள் அதிக இழப்பீடு தொகையை கொடுத்திருப்பதால் இனி பிரீமியம் உயரும் என தெரிகிறது. இதுகுறித்து சற்றே தெளிவாகப் பார்ப்போம்.

ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு இழப்பீடு அல்லது மருத்துவ சிகிச்சைக்கு க்ளைம் கொடுப்பது என்பதற்கு பொதுவான விதிகள் இருக்கும். அதனை அடிப்படையாக வைத்தே ப்ரீமியம் நிர்ணயம் செய்யப்படுகிறது. சமயங்களில் பெரு மழை, இயற்கை பேரிடர்கள் நடந்தால் கூட நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில்தான் நடக்கும் என்பதால், ப்ரீமியத்தில் பெரிய மாற்றம் இருக்காது. ஆனால், தற்போது சர்வதேச அளவில் மருத்துவ நெருக்கடி இருப்பதால் மருத்துவச் செலவு மற்றும் மரணம் அடைந்தால் பாலிசி தொகையை கொடுக்க வேண்டி இருப்பதால் காப்பீடு நிறுவனங்கள் அதிக தொகையை நிர்ணயம் செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஏப்ரல் வரை சுமார் ரூ.2,000 கோடி அளவுக்கு க்ளைம் கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இந்தத் தொகை மேலும் உயரக்கூடும் என காப்பீடு நிறுவனங்கள் கணிக்கின்றன. இழப்பீடு கொடுப்பது மட்டுமல்லாமல், அடுத்துவரும் பல மாதங்கள் நிச்சயமற்ற சூழலில் இருப்பதால் அதற்கும் சேர்ந்த ப்ரீமியத்தை நிர்ணயம் செய்ய காப்பீடு நிறுவனங்கள் திட்டமிடுவதாக தெரிகிறது.

இந்த நிலையில், கொரோனா பாலிசியை புதுப்பிக்க முடியவில்லை அல்லது புதிய கொரோனா பாலிசியை எடுக்க முடியவில்லை என்பது உள்ளிட்ட புகார்கள் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு வருகின்றன.

இதற்கு காப்பீட்டு நிறுவனங்கள் புது விளக்கம் கொடுக்கின்றன. காத்திருப்பு காலத்தை நாங்கள் அதிகரித்திருக்கிறோம் என கூறுகின்றன. ஒரு வாடிக்கையாளர்கள் தமக்கு கொரோனா பாசிட்டிவ் என்று கூறினார் என்னும் பட்சத்தில் மூன்று மாதத்துக்கு பிறகு பாலிசியை புதுப்பிக்கின்றன. (சில நிறுவனங்கள் ஆறு மாதத்துக்கு பிறகுதான் பாலிசியை புதுபிக்க முடியும் என கூறுவதாக தெரிகிறது) மூன்று மாதத்துக்கு பிறகு மீண்டும் மருத்துவப் சோதனை செய்த பிறகே பாலிசியை வழங்குவதாக காப்பீட்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இது தொடர்பாக ஒழுங்குமுறை ஆணையமும் அரசாங்கமும் சரியான வழிகாட்டு நடைமுறைகளை வெளியிட வேண்டும் என்னும் கருத்தும் இருக்கிறது. Incurred Claim Ratio (ICR) மூலமாக ஒரு காப்பீடு நிறுவனம் எப்படி செயல்படுகிறது என்பதை எளிதாக கண்டுபிடிக்கலாம்.

ஒரு குறிப்பிட்ட காலத்தில் வசூல் செய்யப்படும் பிரீமியமும் கொடுக்கப்படும் க்ளைமுக்கும் உள்ள விகிதமே Incurred Claim Ratio. இந்த விகிதம் நன்றாகவே இருக்கிறது. தனியார் காப்பீடு நிறுவங்களுக்கு இந்த விகிதம் 53 சதவீதமாக இருக்கிறது. அதாவது ரூ.100 வசூல் செய்யப்படும் பிரீமியத்தில் 53 ரூபாய் மட்டுமே இழப்பீடாக கொடுக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்த விகிதம் 92 சதவீதமாக இருக்கிறது. அப்படியானால் காப்பீட்டு நிறுவனங்கள் சிறப்பாகவே செயல்பட்டிருக்கின்றன. இந்தச் சூழலில் ப்ரீமியத்தை உயர்த்துவது தேவையில்லாதது என்னும் கருத்துகளையும் ஆலோசர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஐஆர்டிஏ இது தொடர்பாக புதிய விதிகளை உருவாக்கினாலும் காப்பீட்டு பிரீமியம் உயர்வதற்கான சாத்தியங்கள் இருக்கிறது. டேர்ம் இன்ஷூரன்ஸ் மற்றும் மருத்துவ காப்பீட்டின் அவசியத்தை உணர்வதற்கு இதைவிட சரியான தருணம் கிடைக்காது. 

- வாசு கார்த்தி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com