ரீசார்ஜ் கட்டணங்ளை உயர்த்துகிறதா ஏர்டெல்? நிறுவனர் சுனில் மிட்டல் கூறியது என்ன?
செய்தியாளர்: துர்கா தேவி சரவணன்
சாப்பிடும் சிப்ஸ், குடிக்கும் பெப்சி ஆகியவற்றின் விலையைவிட, மொபைல் சேவைகளுக்காக மக்கள் செலுத்தும் கட்டணம் மிகவும் குறைவாக இருப்பதாக பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் நிறுவனர் சுனில் பாரதி மிட்டல் தெரிவித்துள்ளார்.இதனால் இனி ரீசார்ஜ் கட்டணம் அதிகரிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவில் மொபைல் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான சுனில் பாரதி மிட்டல் வலியுறுத்தியுள்ளார். ஒரு பயனருக்கு மாதம் சராசரியாக 350 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும், இதன்படி நாளொன்றுக்கு 10 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை மட்டுமே செலவாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பயனர்கள் வாங்கும் பெப்சி, சிப்ஸ் போன்ற அன்றாடப் பொருட்களுடன் ஒப்பிடும்போது மொபைல் ரீசார்ஜ் கட்டணம் குறைவாகவே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாரதி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் 50-வது ஆண்டு நிறைவையொட்டி PTI செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஒரு பயனரிடமிருந்து மாதந்தோறும் சராசரியாக ரூ.300 வருவாய் கிடைக்க வேண்டும் என்று தான் கூறியிருந்ததாகவும், அது 10 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளைப் பராமரிப்பதற்கான செலவுகள் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டே தற்போது ரூ.350 எனக் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார். எரிபொருள், மின்சாரம், ஊழியர்களின் சம்பளம் மற்றும் நிர்வாகச் செலவுகள் என அனைத்தும் அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், இந்தியாவில் இன்னும் அதிக அளவில் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியிருப்பதே மிகப்பெரிய கவலையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை மேம்படுத்த அதிக முதலீடு தேவைப்படுவதாகவும், 5G சேவைக்காக நிறுவனங்கள் பெருமளவில் செலவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சீனாவில் 10 லட்சத்திற்கும் அதிகமான மொபைல் டவர்கள் உள்ள நிலையில், இந்தியாவில் சுமார் 3.5 லட்சம் டவர்கள் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்கள் வங்கிச் சேவைகள், UPI பணப் பரிவர்த்தனைகள், கல்வி, மருத்துவம் மற்றும் பொழுதுபோக்கு எனப் பல்வேறு தேவைகளுக்கு மொபைல் போன்களைப் பயன்படுத்துகின்றனர். மேலும், YouTube, Instagram போன்ற பொழுதுபோக்குத் தளங்களையும் பயன்படுத்துகின்றனர் என்று மிட்டல் குறிப்பிட்டுள்ளார். பணவீக்கம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான செலவுகள் அதிகரித்துள்ளதால், தற்போது 350 நியாயமான கட்டணமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். வோடஃபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் சவாலான சூழ்நிலையை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏர்டெல் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சில குறைந்த விலைத் திட்டங்களைத் திரும்பப் பெற்றது. இதனால் வாடிக்கையாளர்களின் நிகரச் சேர்க்கை குறைந்ததைத் தொடர்ந்து, இந்த மாதம் 299 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.

