PT Web Explainer: 'ஏர் இந்தியா' மீண்டும் டாடா குழுமத்துக்கு..? - சாதக, பாதக அலசல்!

PT Web Explainer: 'ஏர் இந்தியா' மீண்டும் டாடா குழுமத்துக்கு..? - சாதக, பாதக அலசல்!

PT Web Explainer: 'ஏர் இந்தியா' மீண்டும் டாடா குழுமத்துக்கு..? - சாதக, பாதக அலசல்!
Published on

ஏர் இந்தியா பங்குகளை விற்பனை செய்வதற்கான நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கி இருக்கிறது, தற்போது டாடா குழுமம் இந்நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை கைப்பற்றுவதற்கு விண்ணப்பித்திருக்கிறது. ஏர் இந்தியா டாடா குழுமத்தின் வசமாகும் பட்சத்தில் அதன் சாதக, பாதகங்கள் பற்றிய அலசல்..

ஏர் இந்தியா... இந்த நிறுவனத்தை மீட்பதற்கு மத்திய அரசு தன்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுத்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே கடன் அதிகரித்து வரும் சூழலில், செலவுகளை குறைத்தது. புதிதாக அஸ்வினி லோஹானி என்னும் ஐஏஎஸ் அதிகாரியை மத்திய அரசு நியமனம் செய்தது. சுற்றுலா மற்றும் ரயில்வே துறைகளில் சிறப்பான பல முன்னெடுப்புகளை செய்தததால் ஏர் இந்தியாவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். ஆனால், ஏர் இந்தியாவுக்கு பின்னால் இருக்கும் நெருக்கடியை, புதிதாக தலைவர் ஒருவரை நியமனம் செய்வதால் மட்டுமே சரிசெய்ய முடியாது என்பது காலப்போக்கில் அனைவருக்கும் தெரிந்தது.

நிறுவனம் நஷ்டம் அடைந்துவரும் சூழலில் கடனும் அதிகரித்து வந்தது. அதனால், இனியும் இந்த நிறுவனத்தை வைத்து நடத்துவதால் எந்த பயனும் இல்லை என்னும் முடிவுக்கு வந்த அரசு, அதன் பங்குகளை விற்கும் நடவடிக்கையை எடுத்தது. 2018-ம் ஆண்டு ஏர் இந்தியாவின் பங்குகளை வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. ஒரு விண்ணப்பம் கூட வரமால் அந்த முயற்சி பெரும் தோல்வியில் முடிந்தது.

தற்போது இரண்டாம் முறையாக ஏர் இந்தியா பங்குகளை விற்பனை செய்வதற்கான நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கி இருக்கிறது. இப்போது சில நிறுவனங்கள் விண்ணப்பித்திருப்பதாக தெரிகிறது. ஏர் இந்தியாவை தொடங்கிய டாடா குழுமம், அதே நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை கைப்பற்றுவதற்கு விண்ணப்பித்திருக்கிறது. மேலும், ஏர் இந்தியாவின் பணியாளர்கள் (சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள்) மற்றும் அமெரிக்காவை சேர்ந்த இண்டர்அப்ஸ் நிறுவனம் இணைந்து ஏர் இந்தியாவை மீட்பதற்கு விண்ணப்பித்திருக்கின்றன.

டாடாவுக்கு கிடைக்குமா?

1932-ம் ஆண்டு டாடா குழுமம் விமானப் போக்குவரத்து துறையில் நிறுவனம் தொடங்கியது. அதன் பிறகு 1953-ம் ஆண்டு பொதுத்துறை நிறுவனமாக மாறியது. கிட்டத்தட்ட 67 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்துக்கு செல்வதற்கான வாய்ப்பு உருவாகி இருக்கிறது. கடந்த திங்கள்கிழமை (டிசம்பர் 14) விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள். டாடா குழுமமும் ஆர்வம் காண்பித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இருந்தாலும் டிசம்பர் 29-ம் தேதி நேரடியாக ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஜனவரி 5-ம் தேதி இது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒருவேளை டாடா குழுமத்துக்கு ஏர் இந்தியா கிடைத்தால் இந்தியாவின் இரண்டாவது பெரிய விமான குழுமமாக டாடா மாறும். ஏற்கெனவே விஸ்தாரா மற்றும் ஏர் ஏசியா இந்தியா ஆகிய நிறுவனங்களை டாடா குழுமம் நடத்தி வருகிறது. தற்போது ஏர் இந்தியாவும் இணையும் பட்சத்தில் 22.9 சதவீத சந்தை டாடா குழுமம் வசம் இருக்கும். ஆனால், விஸ்தாரா நிறுவனத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கிட்டத்தட்ட சரி சமமான பங்குகளை வைத்திருக்கிறது. ஏர் இந்தியாவை வாங்குவதில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விரும்பவில்லை என தெரிகிறது. அதனால், ஏர் இந்தியாவை தங்களது குழுமத்தில் மூன்றாவது நிறுவனமாக நடத்துமா அல்லது ஏர் ஏசியா மூலமாக வாங்குமா என்பது குறித்து இன்னும் தெளிவு கிடைக்கவில்லை.

வாங்கும் நிறுவனத்துக்கு என்ன கிடைக்கும்?

ஏர் இந்தியா கடனில் இருக்கும் நிறுவனம் என்றாலும் மதிப்பிட முடியாத பல சொத்துகள் உள்ளன. முதலாவது, தற்போது வாங்கும் நிறுவனத்துக்கு 100 சதவீத நிறுவனம் கிடைக்கும். (2018-ம் ஆண்டு நிறுவனத்தின் 76 சதவீத பங்குகளை மட்டும் விற்க மத்திய அரசு திட்டமிட்டது) இந்தியாவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் உள்ள பல வழித்தடங்கள் ஏர் இந்தியா வசம் உள்ளன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு செல்லவும் நீண்ட வழித்தடங்கள் மற்றும் சர்வதேச அளவில் பல முக்கிய நகரங்களுக்கு விமானங்களை இயக்குவதற்கு தேவையான அனுமதியும் ஏர் இந்தியா வசம் உள்ளது. உள்நாட்டிலும் பெரும்பாலான வழித்தடங்களில் ஏர் இந்தியா செயல்படுகிறது. மேலும் பயிற்சி பெற்ற பணியாளர்களும் ஏர் இந்தியாவில் உள்ளனர்.

அரசுக்கு என்ன கிடைக்கும்?

நடப்பு நிதி ஆண்டில் பங்கு விலக்கல் மூலம் ரூ.2 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால், கொரோனா காலத்தில் திட்டமிட்ட தொகையில் 5 சதவீதம் அளவுக்கு கூட திரட்ட முடியவில்லை. அதனால், ஏர் இந்தியா பங்குகளை விற்பதால் கணிசமான தொகை மத்திய அரசுக்கு கிடைக்கும். தவிர நிதி கிடைப்பது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏர் இந்தியாவில் முதலீடும் செய்யத் தேவையில்லை என மத்திய அரசு கருதுகிறது.

பாதகம் என்ன?

கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, ஏர் இந்தியாவின் கடன் சுமார் ரூ.60,000 கோடி. இதில் கணிசமான கடன் தொகையை Special purpose vehicle மூலமாக மத்திய அரசு மாற்றிவிடும். இருந்தாலும் புதிதாக வாங்கும் நிறுவனத்துக்கு ரூ.23,286 கோடி கடன் சுமையை ஏற்க வேண்டி இருக்கும். தவிர ஏற்கெனவே சிக்கலில் இருக்கும் நிறுவனம் என்பதால் அந்தக் குழுமத்தை புதிதாக வாங்கும் நிறுவனத்துக்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும். அரசு அதிகாரிகளின் தகவல்கள்படி, ஏர் இந்தியாவை நிர்வகிக்க ஒவ்வொரு மாதமும் ரூ.500 கோடி அளவுக்கு தேவைப்படுகிறது. ஒருவேளை டாடா குழுமத்துக்கு கிடைக்கிறது என்று வைத்துக்கொண்டால் ஏற்கெனவே இருக்கும் இரு விமான நிறுவனங்கள் லாப பாதையில் இல்லை. இந்த நிறுவனமும் இணையும் பட்சத்தில் பெரிய நிறுவனமாக மாறும், ஆனால் அதுவே சிக்கலாகிவிட்டால்..?

பல விண்ணப்பங்கள் வந்திருப்பதாக மத்திய அரசு செயலாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். யாருக்கு ஏர் இந்தியா செல்லும் என்பது அடுத்த மாதம் தெரியும்.

- வாசு கார்த்தி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com