பெர்சனல் லோன் வாங்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்!

பெர்சனல் லோன் வாங்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்!
பெர்சனல் லோன் வாங்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்!

இப்பவே பணம் தேவை... நண்பர்களிடம் புரட்ட முடியாது, உறவினர்களிடம் பேசிப் பயன் இல்லை என்ற பின் தனிநபர் கடன் வாங்க நிதி நிறுவனங்களை நாடுவர். அப்படி பர்ஷனல் லோன் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்ப்போம்.

கட்டாயம் கடன் வாங்கணுமா..?

அவசர மருத்துவமனைச் செலவுகள், கல்விச் செலவுகளுக்கு கடன் வாங்குவதை தவிர்க்க முடியாது. கடன் கொடுத்த நண்பர் கோபத்தில் குறை கூறிவிட்டார் இப்போதே திருப்பி அடைக்கப் போகிறேன் பார்... மாமியார் மாமனார், நண்பர்கள் முன் கெத்துதைக் காட்ட வெட்டிச் செலவு செய்ய பணம் தேவை... போன்ற உப்புசப்பில்லாத விஷயங்களுக்கு தேவையில்லாமல் கடன் சுமையை உருவாக்கிக் கொள்ள வேண்டாம். கடன் வாங்கி வெட்டி ஜம்பத்துக்கு திருமணம் நடத்தி, வாழ்கை முழுவதும் கடனாளியாக இருக்க வேண்டாம். எனவே கடன் வாங்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கடன் வாங்குங்கள்.

`இந்த செலவை ஒத்திப் போடவே முடியாது, அப்படி ஒத்திப் போட்டால் பெரிய நஷ்டம் ஏற்படும் அல்லது எதிர்காலத்தில் சிரமப்படுவோம்’ என்றால் மட்டும் கடன் வாங்குங்கள். தயவு செய்து வெட்டி கெளரவத்துக்காக கடன் வாங்கி வேட்டு வைத்துக் கொள்ளாதீர்கள்.

கிரெடிட் ஸ்கோர் + சம்பளம் (அ) வருமானம்

கடன் வாங்குவதென தீர்மானித்த பிறகு, நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலையே உங்கள் கிரெடிட் ஸ்கோரை சரிபார்ப்பது தான். டிரான்ஸ் யூனியன் சிபில் போன்ற பல தளங்களில் இலவசமாக உங்கள் கிரெடிட் ஸ்கோரை சரிபார்த்துக் கொள்ளலாம். வேறு நிதி நிறுவனங்களில் கடன் இல்லாமல் இருப்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

உங்கள் கிரெடிட் ஸ்கோர் 600-க்குக் கீழ் இருந்தால் கடன் கிடைப்பது சிரமம். அப்படியே கிடைத்தாலும் வட்டி அதிகமாகச் செலுத்த வேண்டி இருக்கும். அதோடு உங்கள் சம்பளம் அல்லது தொழிலிருந்து வரும் வருமான கணக்கை சீராக வைத்திருங்கள். அது, நிதி நிறுவனங்கள் உங்களை நம்பி கடன் கொடுக்க உதவும்.

வேறு கடன் வாங்கலாமே

`சரி, கட்டாயம் இந்த நேரத்தில் இந்த செலவை செய்தே ஆக வேண்டும். அதற்கு கடன் வாங்குவதென முடிவாகிவிட்டது’ என வைத்துக் கொள்வோம். இப்போது தனிநபர் கடன் (Personal Loan) தான் வாங்க வேண்டுமா..? வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்குவது, தங்கத்தை அடமானம் வைத்து பணம் திரட்டலாமா என கொஞ்சம் கணக்கு போடுங்கள்.

தனிநபர் கடன்களுக்கு எஸ் பி ஐ வங்கியில் 9.60%, ஹெச் டி எஃப் சி வங்கியில் 10.50 % முதல் வட்டி கணக்கிடப்படுகிறது. ஆனால், தங்கத்துக்கு எதிரான கடன்களுக்கு எஸ் பி ஐ 7.00%, கனரா வங்கி 7.35 % பஞ்சாப் நேஷனல் வங்கி 7.70% முதல் கடன் கொடுக்கப்படுகிறது. வீடு, நிலம் போன்ற சொத்து பத்துக்களுக்கு எதிராக எஸ் பி ஐ 8.45%, ஹெச் டி எஃப் சி வங்கி 8.50%, ஆக்ஸிஸ் வங்கி 9.00% முதல் கடன் கொடுக்கிறார்கள். தனிநபர் கடனுக்கு வசூலிக்கப்படும் வட்டியை விட தங்கத்துக்கான கடன் மற்றும் வீடு, நிலம் போன்ற சொத்துக்களுக்கு எதிரான கடன்களுக்கு வசூலிக்கப்படும் வட்டித் தொகை குறைவே. எனவே நீங்கள் வாங்கும் கடன் தொகை + உங்கள் கையில் இருக்கும் சொத்துபத்துக்களைப் பொறுத்து, எந்த கடன் வாங்குவதென கொஞ்சம் கணக்கிட்டுப் பாருங்கள்.

இ எம் ஐ + திருப்பிச் செலுத்தும் காலம்

உங்கள் மொத்த சம்பளம் அல்லது மாத வருமாநத்தில் 40 - 50 சதவீதம் வரை மட்டுமே இ எம் ஐ தொகையாக இருந்தால், உங்கள் சொந்த செலவுகளை சமாளிக்க உதவிகரமாக இருக்கும். அதே நேரத்தில் ஒரு கடனை எவ்வளவு குறைவான காலத்துக்குள் அடைக்க முடியுமோ அத்தனை விரைவாக அடைப்பது நல்லது. அது நிதி நிறுவனங்களுக்கு நீங்கள் செலுத்தும் வட்டியைக் குறைக்கும். விரைவாக கடனைத் திருப்பிச் செலுத்திவிட்டால், மேற்கொண்டு ஏதேனும் கடன் வாங்கும் சூழல் ஏற்பட்டால் அப்போது இது உதவும். ஏற்கனவே கடன் இருக்கும் ஒரு நபருக்கு கடனை வழங்க நிதி நிறுவனங்கள் தயங்கும் என்பது நினைவுகூரத்தக்கது.

அதே போல, வரும் டிசம்பரில் எனக்கு ஊதிய உயர்வு கிடைக்கு, வேறு வேலை மாறும் போது கிடைக்கும் கூடுதல் ஊதிய உயர்வை இதற்கு பயன்படுத்திக் கொள்வேன் என கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தையும் இ எம் ஐ தொகையையும் கணக்கிடாதீர்கள். கையில் இருக்கும் வருமானத்தைப் பொறுத்து இ எம் ஐ-ஐ கணக்கிடுங்கள்.

ப்ராசசிங் ஃபீஸ்:

ஒரு கடனை வங்கி வழங்குவதற்கு முன்பே இந்த தொகையை பிடித்தம் செய்து கொள்ளும். சில வங்கிகளில் இந்தக் கட்டணம் இல்லை, ஆனால் பல வங்கிகள் குறைந்தபட்சத் தொகையாக 1,000 ரூபாய் முதல் வசூலிக்கிறார்கள். சில வங்கிகள் ஒட்டுமொத்த கடன் தொகையில் 1% முதல் ப்ராசசிங் கட்டணத்தை வசூலிக்கிறார்கள். எனவே நீங்கள் கடன் வாங்கும் வங்கி எவ்வளவு ப்ராசசிங் கட்டணத்தை வசூலிக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ப்ரீ குளோசர் சார்ஜஸ்:

ஒரு அவசர தேவைக்காக கடன் வாங்கினீர்கள். தற்போது பணம் கிடைத்துவிட்டது. இதை வைத்துக் வாங்கிய கடனை அடைக்கச் சென்றால் ஒரு குறிப்பிட்ட தொகையை அல்லது மீதமிருக்கும் கடன் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ப்ரீ குளோசர் சார்ஜஸாகச் செலுத்த வேண்டி இருக்கும். எஸ் பி ஐ வங்கியில் இது தனிநபர் கடன்களுக்கு 3 சதவீதமாக இருப்பதாக பைசா பசார் தளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஐசிஐசிஐ வங்கியில் 5 சதவீதமாக இருக்கிறது. ஹெச் டி எஃப் சி வங்கியில் வாங்கி இருக்கும் கடனைப் பொருத்து 4 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது. சில கிரெடிட் கார்ட் கடன்களுக்கு நிலையாக சில ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.

லேட் பேமென்ட் சார்ஜஸ்:

மாதாமாதம் இ எம் ஐ தொகையை ஒழுங்காகச் செலுத்தி வருகிறீர்கள். ஏதோ ஒரு மாதம் மட்டும் குறிப்பிட்ட தேதிக்குள் பணத்தை ஒழுங்காகச் செலுத்த முடியவில்லை எனில், அதற்கு 'லேட் பேமென்ட் சார்ஜஸ்' என்கிற பெயரில் ஒரு கட்டணத்தை நிதி நிறுவனங்கள் வசூலிக்கும். இது ஒரு தாமதமான இ எம் ஐ-க்கு 500 ரூபாய் + 18% ஜி எஸ் டி தொடங்கி, இ எம் ஐ தொகையில் ஒரு சில சதவீதம் வரை போகும். இது குறித்து தெளிவான விவரங்களை அறிந்து கொண்டு கடனைப் பெறுங்கள். இல்லையெனில் பஞ்சராவது உங்கள் பர்ஸாகத் தான் இருக்கும்.

- கெளதம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com