“பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவை இந்தியா முந்தும்” - ஐ.எம்.எஃப். கணிப்பு
உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு வரும் 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவை விட அதிகமாக இருக்கும் என சர்வதேச நிதியம் கணித்துள்ளது.
உலக பொருளாதார வளர்ச்சி குறித்த ஆய்வை கடந்த வாரத்தில் சர்வதேச நிதியம் வெளியிட்டுள்ளது. அதில், சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் பங்களிப்பு அதிகரிக்கும் என சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, 2024ஆம் ஆண்டில் சீனாவின் பங்களிப்பு 32 புள்ளி 7 சதவிகிதத்திலிருந்து 28 புள்ளி 3 சதவிகிதமாகக் குறையும் என்றும், இருப்பினும் அந்நாடு முதல் இடத்திலேயே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 2024ஆம் ஆண்டில் சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவின் பங்களிப்பு 13 புள்ளி 8 சதவிகிதத்திலிருந்து 9 புள்ளி 2 சதவிகிதமாகக் குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவின் பங்களிப்பு 2024ஆம் ஆண்டில் 15 புள்ளி 5 சதவிகிதமாக உயரும் என்றும் சர்வதேச நிதியம் கணித்துள்ளது. இந்தோனேஷியாவின் பங்களிப்பு 2024ஆம் ஆண்டில் 3 புள்ளி 7 சதவிகிதமாக அதிகரித்து 4ஆவது இடத்திலும், ரஷ்யா 2 சதவிகித பங்களிப்புடன் 5ஆவது இடத்திலும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.