'ஆக.1 முதல் விடுமுறை நாட்களிலும் சம்பளம் கிரெடிட் - ரிசர்வ் வங்கி
வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் என்.ஏ.சி.ஹெச் (NACH) அனைத்து நாட்களிலும் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. அதனால் இனி சரியாக சம்பளத் தேதியில் நிறுவனங்கள் சம்பளத்தை வரவு வைக்க முடியும்.
கடந்த வாரம் ரிசர்வ் வங்கி பணப்பரிவர்த்தனை தொடர்பான விதிமுறைகளில் சில மாற்றம் செய்தது. மொத்த பரிவர்த்தனைகள் அனைத்தும் National Automated Clearing House (NACH) மூலமாகவே நடக்கும். ஆனால், இந்த அமைப்பு விடுமுறை தினங்களில் செயல்படாது. அதனால், வழக்கமான சம்பள தேதி அன்று விடுமுறையாக இருக்கும்பட்சத்தில் அடுத்த நாளோ அல்லது விடுமுறைக்கு முன்பாகவே சம்பளத்தை நிறுவனங்கள் செலுத்தும்.
இந்நிலையில், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் என்.ஏ.சி.ஹெச் அனைத்து நாட்களிலும் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. அதனால் இனி சரியாக சம்பளத் தேதியில் நிறுவனங்கள் சம்பளத்தை வரவு வைக்க முடியும். அதேபோல நீங்கள் செலுத்த வேண்டிய தொகையை விடுமுறை நாட்களாக இருந்தாலும் வங்கியில் இருந்து எடுத்துகொள்ளப்படும்.
உதாரணத்துக்கு மியூச்சுவல் பண்ட், வீட்டுக்கடன், காப்பீடு, கார் லோன் அல்லது ஏதாவது ஒரு தொகையை செலுத்த 10-ம் தேதி என ஒதுக்கப்பட்டிருக்கும். சரியாக ஒவ்வொரு மாதமும் 10-ம் தேதி வங்கியில் இருந்து பணம் எடுக்கப்படும். ஒருவேளை பத்தாம் தேதி விடுமுறை எனில் அடுத்த நாள் வங்கியில் இருந்து பணம் எடுக்கப்படும். நாமும் இதற்கு தயாராகவே இருப்போம்.
ஆனால், இனி அனைத்து நாட்களிலும் பரிவர்த்தனை நடக்கும் என்பதால் நமக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைக்கும் அதே சமயத்தில், நாம் செலுத்த வேண்டிய தொகையையும் செலுத்த வேண்டி இருக்கும்.
தற்போது வங்கி நாட்களில் மட்டுமே NACH செயல்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அனைத்து நாட்களிலும் செயல்படும். ஒருவேளை வங்கி கணக்கில் பணம் இல்லாவிடின் அபராதம் செலுத்த வேண்டி இருப்பது மட்டுமல்லாமல் உங்கள் சிபில் ஸ்கோரும் பாதிக்கப்படும்.