அடுத்த ஆண்டு முதல் நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் - மத்திய அரசு
அடுத்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி முதல் தங்க நகைகள், கலைப்பொருட்களுக்கு ஹால்மார்க் தரமுத்திரை கட்டாயம் என மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
புதிய முறைக்கு மாற நகை தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கு ஓராண்டு அவகாசம் தரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கையின்படி, பதிவு பெற்ற நகை வணிகர்கள் மட்டுமே தங்க நகைகள், கலைப்பொருட்களை அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்ய முடியும்.
இப்போது தங்க நகைகளை தர அடிப்படையில் 10 ரகங்களில் விற்க அனுமதிக்கப்படும் நிலையில், புதிய முறையின்கீழ் 14, 18 மற்றும் 22 காரட் தரத்தில் மட்டுமே தங்க நகைகளை விற்க முடியும். இந்திய தரச்சான்று நிறுவனம் மூலம் நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை பெறும் வசதி இப்போது இருந்தாலும், அது கட்டாய நடைமுறை இல்லை.
இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி முதல் ஹால்மார்க் முத்திரை பெற்ற நகைகளை மட்டுமே நகை வணிகர்கள் விற்க முடியும் என மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.