"அடித்தட்டு மக்களுக்கு ரொக்கமாக நிதி வழங்குக!" - உரக்கக் குரல் எழுப்பும் உதய் கோடக்

"அடித்தட்டு மக்களுக்கு ரொக்கமாக நிதி வழங்குக!" - உரக்கக் குரல் எழுப்பும் உதய் கோடக்
"அடித்தட்டு மக்களுக்கு ரொக்கமாக நிதி வழங்குக!" - உரக்கக் குரல் எழுப்பும் உதய் கோடக்

"ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவை கொரோனா புரட்டிபோட்டுவிட்டது. இதனால் நாடு பெரும் சிக்கலில் இருக்கிறது. நிதிச் சலுகைகளை அறிவிப்பதற்கு இதுவே சரியான நேரம்" என்று இந்திய தொழிலக கூட்டமைப்பின் தலைவர் உதய் கோடக் தெரிவித்திருக்கிறார். தவிர, "நிதிச் சலுகைகளை இப்போது அறிவிக்கவில்லை என்றால், எப்போது?" என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "இரண்டு கட்டங்களாக நிதிச் சலுகை அறிவிக்கப்பட வேண்டும். முதல் கட்டமாக அடித்தட்டு மக்களுக்கு நேரடியாக இந்த நிதி சலுகை எதாவது ஒரு வழியில் ரொக்கமாக சென்றடைய வேண்டும். இந்திய ஜிடிபியில் ஒரு சதவீதம் அல்லது ஒரு லட்சம் கோடி ரூபாய் முதல் 2 லட்சம் கோடி ரூபாய் வரை அடித்தட்டு மக்களுக்கு சென்று சேருவது அவசியம். இந்த தொகை அவர்களின் உணவு மற்றும் அடிப்படை தேவைகளுக்கு பயன்படும். பொதுமக்களுக்கு வழங்கும் தொகை மீண்டும் பொருளாதாரத்துக்கே மீண்டும் வரும். மக்களின் நுகர்வும் உயரும்.

இரண்டாவதாக தொழில்துறைக்கு சலுகைகளை அறிவிக்க வேண்டும். சில தொழில்கள் கோவிட் சூழலால் மாறுதலுக்கு தயாராகி கொண்டுள்ளன. சில தொழில்களின் பிஸினஸ் மாடல் மொத்தமாக மாறிவிட்டன. முதல் கட்டத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்போது அவர்கள் மீண்டெழுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால், மொத்த பிஸினஸ் மாடலும் மாறி இருப்பவர்களுக்கு வேறு வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

கடந்த ஆண்டு சிக்கலில் இருக்கும் துறைகளுக்கு நிதி உதவியை அரசு அறிவித்தது. அதேபோல இந்த ஆண்டும் சலுகையை மத்திய அரசு வழங்க வேண்டும். அவசரகால கடன் உத்தரவாத திட்டம் (Emergency credit line guarantee scheme) மூலமாக சுமார் ரூ,5 லட்சம் கோடி வழங்க வேண்டும் என பரிந்துரை செய்கிறேன். இந்தளவுக்கு உதவி தேவைப்படும் நேரமாகவே பார்க்கிறேன்" என்று உதய் கோடக் கூறியிருக்கிறார்.

மேலும், "பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தவரையில், நடப்பு நிதி ஆண்டு முடிவில் இந்தியா இரண்டு ஆண்டுகள் பின்னோக்கி இருக்கும் என்பது எங்களின் கணிப்பு. 

கொரோனா தடுப்பூசி...

தடுப்பூசி போடும் வேகத்தை வைத்துதான் கொரோனா பரவலை குறைக்க முடியும். தற்போது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் 50 சதவீதம் மத்திய அரசு கொள்முதல் செய்யும். மீதமுள்ளவற்றுக்கு தனியார் நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகள் நேரடியாக தடுப்பூசி நிறுவனங்களிடம் பெற்றுக்கொள்ள வேண்டும். தனியார் நிறுவனங்களுடன் போட்டிபோட்டு மாநில அரசுகள் குறிப்பிட்ட காலத்துக்குள் நேரடியாக கொள்முதல் செய்வதில் சிக்கல் இருக்கிறது.

அதனால், மத்திய அரசு 75 சதவீதம் வரையில் கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு சரிசமமாக பிரித்துக்கொடுக்க வேண்டும். மீதமுள்ள தடுப்பூசி நேரடியாக தனியாருக்கு செல்லும் பட்சத்தில்தான் நம்மால் குறுகிய காலத்தில் அதிக மக்கள் தொகைக்கு தடுப்பூசி செலுத்த முடியும்.

ஜூன் மாத இறுதிக்குள் இந்தியாவில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 50,000 ஆக குறையும் என எதிர்பார்க்கிறோம். தற்போது லாக்டவுன் பெரும்பாலான மாநிலங்களில் இருக்கிறது. தற்போது இருக்கும் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால், அவை அறிவியல்பூர்வமாக எடுக்கப்பட்டவையாக இருக்க வேண்டும்.

மூன்றாம் அலை வருமா, அதனால் பாதிப்பு எப்படி இருக்கும் என்பதெல்லாம் தற்போது தெரியாது. ஆனால், அதற்கு தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவது அவசியம். ஆக்சிஜன் படுக்கைகள், உயிர்காக்கும் மருந்துகள், சாதாரண படுக்கைகள் போன்றவற்றை உருவாக்கி இருக்க வேண்டும். இரண்டாம் அலையில் நாம் சந்தித்த சிக்கல்கள் மூன்றாம் அலையில் நமக்கு வரக்கூடாது.

அதேபோல வீட்டில் இருந்து வேலை செய்வது அதிகரித்திருப்பதால் வர்த்தகரீதியிலான ரியல் எஸ்டேட் தேவை வரும் காலத்தில் குறைய வாய்ப்பு இருக்கிறது" என உதய் கோடக் தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com