'இது வேகமெடுக்கும் காலம்; கட்டணங்களை கட்டுப்படுத்தாதீர்கள்!'- 'இண்டிகோ' தத்தா சொல்வது ஏன்?

'இது வேகமெடுக்கும் காலம்; கட்டணங்களை கட்டுப்படுத்தாதீர்கள்!'- 'இண்டிகோ' தத்தா சொல்வது ஏன்?
'இது வேகமெடுக்கும் காலம்; கட்டணங்களை கட்டுப்படுத்தாதீர்கள்!'- 'இண்டிகோ' தத்தா சொல்வது ஏன்?

விமானப் போக்குவரத்து துறையின் மோசமான காலம் முடிவடைந்துவிட்டது என இண்டிகோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரொனோஜாய் தத்தா தெரிவித்திருக்கிறார். மே மாத தொடக்கத்தில் கொரோனா உச்சத்தில் இருந்தபோது மோசமான காலம் என்றும், மே மாதம் 18-ம் தேதி மிகவும் குறைவான இண்டிகோ விமானங்கள் மட்டும இயக்கப்பட்டன என்றும் அவர் கூறியுள்ளார்.

"கொரோனாவுக்கு முன்பாக தினமும் ரூ.100 கோடிக்கு மேல் டிக்கெட் விற்பனையானது. ஆனால், மே மாதத்தில் கோவிட் உச்சமாக இருந்த சமயத்தில் சராசரியாக 15 கோடி ரூபாய்க்கு மட்டுமே டிக்கெட் முன்பதிவு இருந்தது. ஆனால், தற்போது சராசரியாக ரூ.28 கோடி முதல் ரூ.30 கோடி வரை டிக்கெட் முன்பதிவு நடக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் கோவிட்டுக்கு முந்தைய கால விற்பனையில் 80 சதவீதம் அளவுக்கு எட்டிவிடுவோம் என நம்புகிறோம் என தெரிவித்திருக்கிறார். கடந்த ஆண்டு பத்து சதவீத பணியாளர்களை நீக்கினோம். ஆனால் இந்த ஆண்டு அப்படி எந்த திட்டமும் இல்லை.

மேலும் விமான டிக்கெட்களுக்கான உச்ச வரம்பு கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்யக்கூடாது. தற்போது விமான போக்குவரத்து துறை வேகம் எடுக்கும் சூழலில் அரசு இதனை கைவிட வேண்டும். முதல் அலையில் அரசு நிர்ணயம் செய்ததில் எந்த பிரச்சினையும் இல்லை. அப்போது அனைவருக்குமே அது புதிய அனுபவம். அதனால் அனைவரும் சேர்ந்த செயல்பட்டோம். சூழலை எப்படி கையாளுவது என்பது தெரியாததால் அப்போது உதவியாகவும் இருந்தது. தற்போது கட்டண கட்டுப்பாடுகள் தேவையில்லை என்றே கருதுகிறோம். கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து வரும் சூழ்நிலையில் விமான போக்குவரத்து துறையில் இருக்கும் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் அதேபோல வரி விகிதங்களும் குறைக்கப்பட வேண்டும்" என்று தத்தா குறிப்பிட்டார்.

மேலும், "தற்போது உள்நாட்டு போக்குவரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். உள்நாட்டு போக்குவரத்தை பொறுத்தவரை, கடந்த 18 மாதங்களில் கோவை, ராஞ்சி, பாட்னா ஆகிய நகரங்களில் பெரும் வளர்ச்சி உருவாகி இருக்கிறது. சர்வதேச போக்குவர்த்தில் ஆர்வமாக இருந்தாலும் அதற்கான வாய்ப்புகள் உடனடியாக இல்லை என்பதே சூழல். பாதிப்புகள் குறைந்தபிறகு வெளிநாட்டு அரசுகளும் கூடுதல் போக்குவரத்துக்கு அனுமதி கொடுப்பார்கள் என நம்புகிறோம்.

இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு எந்தவிதமான கட்டுபாடுகளும் இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். சர்வதேச போக்குவரத்தை உயர்த்துவதற்கு இதுதான் சரியான திட்டமாக இருக்க முடியும்" என்று தத்தா தெரிவித்திருக்கிறார்.

தற்போது விமானங்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு கட்டுப்பாடு விதித்திருக்கிறது. அதேபோல தூரம் மற்றும் பயண நேரத்தை வைத்து குறைந்தபட்ச கட்டணம் மற்றும் அதிகபட்ச கட்டணத்தை நிர்ணயம் செய்திருக்கிறது. இதுபோன்ற விலை கட்டுப்பாடுகள் இருந்தால் மட்டுமே கோவிட்டுக்கு பிறகு அனைத்து விமான நிறுவனங்களும் செயல்பட முடியும். விலை கட்டுப்பாடு இல்லையெனில் சில நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் ஏற்படும் என அரசு கருதுவதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com