அமெரிக்காவின் நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோரான் மம்தானி நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற நியூயார்க் மேயர் தேர்தலில் முன்னாள் மேயர் ஆன்ட்ரூ குவோமோ, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி, குடியரசுக் கட்சியின் சார்பாக கர்டிஸ் ஸ்லிவா ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தல் பிரசாரத்தின்போது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஜோஹ்ரான் மம்தானியை கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், ”நியூயார்க் மேயர் தேர்தலில் இடதுசாரி கொள்கைகளை கொண்ட மம்தானி வெற்றி பெற்றால், நியூயார்க்கிற்கு அரசு நிதி வழங்காது” என அதிபர் ட்ரம்ப் என மிரட்டியிருந்தார். எனினும், அதையும் தாண்டி அவரது வாக்குறுதிகளும் ட்ரம்பின் மிரட்ட்லுமே மம்தானிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தது. இதன்மூலம், 34 வயதான அவர், முதல் இஸ்லாமிய மேயர், முதல் ஆசியர், முதல் இந்திய வம்சாவளி மேயர் உள்ளிட்ட பெருமைகளைப் பெற்றார். இதற்கிடையே, கருத்து மோதலுக்குப் பிறகு மம்தானியும் ட்ரம்பும் சந்தித்துக் கொண்டனர். அதன்பிறகு, இருதரப்பும் சமாதானமானதாகச் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், புத்தாண்டு பிறந்த அடுத்த சில நிமிடங்களில், நியூயார்க்கின் பயன்படுத்தப்படாத பழைய சிட்டி ஹால் சுரங்க ரயில் நிலையத்தில் மம்தானி பதவியேற்றார். தனது தாத்தாவின் குர்ஆன் மற்றும் புகழ்பெற்ற கருப்பின எழுத்தாளர் ஆர்டுரோ ஸ்காம்பர்க் வைத்திருந்த குர்ஆன் சாட்சியாக சத்தியப்பிரமாணம் எடுத்து, நியூயார்க் நகரை வழிநடத்தும் முதல் தெற்காசிய மற்றும் முஸ்லிம் என்ற பெருமையை பெற்றார். குர்ஆன் மீது சத்தியம் செய்து பதவியேற்ற முதல் நியூயார்க் மேயராக மம்தானி உலக அளவில் கவனத்தை ஈர்த்தார். பதவியேற்புக்குப் பின் உரையாற்றிய அவர், “இன்று முதல், நாங்கள் விரிவாகவும் துணிச்சலுடனும் ஆட்சி செய்வோம். நாங்கள் எப்போதும் வெற்றி பெறாமல் போகலாம், ஆனால் முயற்சி செய்ய தைரியம் இல்லாதவர்கள் என்று ஒருபோதும் குற்றம்சாட்டப்பட மாட்டோம். நான் ஒரு ஜனநாயக சோசலிஸ்டாக ஆட்சி செய்வேன். தீவிரவாதமாகக் கருதப்படுவோமோ என்ற பயத்தில் எனது கொள்கைகளை நான் கைவிட மாட்டேன். நியூயார்க், இனி 1% மக்களால் மட்டுமே ஆளப்படும் ஒரு நகரத்தின் கதையாக இருக்காது. அல்லது பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் என இரண்டு நகரங்களின் கதையாக இருக்காது” என உரையாற்றினார்.
உகாண்டாவின் கம்பாலாவில் அக்டோபர் 18, 1991 அன்று பிறந்தவர் ஜோஹ்ரான் மம்தானி. அவரது பெற்றோர் இருவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்: அவரது தந்தை பம்பாயில் பிறந்து உகாண்டாவில் வளர்ந்த குஜராத்தி முஸ்லிம், மற்றும் அவரது தாயார் ரூர்கேலாவில் பிறந்து புவனேஸ்வரில் வளர்ந்த பஞ்சாபி இந்து ஆவர். ’சலாம் பாம்பே’, ’தி நேம்சேக்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய மீரா நாயர் மற்றும் புகழ்பெற்ற அறிஞர் மஹ்மூத் மம்தானியின் மகன் ஆவார். அவருக்கு ஏழு வயதாக இருந்தபோது நியூயார்க் நகருக்கு அவரது பெற்றோர் குடிபெயர்ந்தனர். கானாவின் முதல் ஜனாதிபதி குவாமே நக்ருமாவின் நினைவாக அவரது தந்தை அவருக்கு "குவாமே" என்ற நடுப் பெயரைச் சூட்டினார்.
பிராங்க்ஸ் உயர்நிலை அறிவியல் பள்ளியின் முன்னாள் மாணவரான மம்தானி, 2014 ஆம் ஆண்டு மைனேயில் உள்ள பௌடோயின் கல்லூரியில் ஆப்பிரிக்கா ஆய்வுகளில் பட்டம் பெற்றார். அங்கு இருந்தபோது, பாலஸ்தீனத்தில் நீதிக்கான மாணவர்கள் என்ற வளாக அத்தியாயத்தை இணைந்து நிறுவினார். அரசியலில் நுழைவதற்கு முன்பு, மம்தானி வீட்டுவசதி ஆலோசகராகப் பணியாற்றினார். அப்போது, புலம்பெயர்ந்த குடும்பங்களுக்கு உதவினார். 2020ஆம் ஆண்டில், ஐந்து முறை பதவியில் இருந்த அரவெல்லா சிமோட்டாஸை நியூயார்க் மாநில சட்டமன்றத்தில் ஓர் இடத்தைப் பெறுவதற்காக தோற்கடித்தார். 2022 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அவர் போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது அவருடைய அரசியலின் வளர்ச்சியாகப் பார்க்கப்பட்டது. அதன் வளர்ச்சி, தற்போது மேயராகவும் பதவியேற்றுள்ளார்.