நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். இதுதொடர்பாக பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இதனிடையே, ”எங்களுடன் ஆலோசிக்காமல் எடுக்கப்படும் எந்த முடிவையும் ஏற்க முடியாது” உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார். இதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக எச்சரித்திருந்தார்.
இதற்கிடையே, ரஷ்யா தாக்குதலை நிறுத்துவது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்கா சென்று அதிபர் ட்ரம்பைச் சந்தித்துப் பேசினார். அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கி ஆகியோர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், கனிமவளங்கள் ஒப்பந்தத்திலும் உக்ரைன் கையெழுத்திட மறுத்துவிட்டது. இதனால் கோபமடைந்த ட்ரம்ப், ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அளிக்கப்பட்டு வந்த ராணுவ உதவிகளை நிறுத்துவதாக அறிவித்தார்.
இந்த நிலையில், அதிபர் ட்ரம்புவிடம் விஷயங்களைச் சரியாகச் செய்ய விரும்புவதாகவும், உக்ரைனில் நீடித்த அமைதியைப் பெற அவரது வலுவான தலைமையின் கீழ் பணியாற்ற விரும்புவதாகவும் உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “வெள்ளை மாளிகையில் நடந்த எங்கள் சந்திப்பு, அது நடக்க வேண்டிய வழியில் நடக்கவில்லை. அது அப்படி நடந்தது வருந்தத்தக்கது. விஷயங்களைச் சரியாகச் செய்ய வேண்டிய நேரம் இது. எதிர்கால ஒத்துழைப்பும் தகவல் தொடர்பும் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் யாரும் முடிவில்லாத போரை விரும்பவில்லை. உக்ரைன், நீடித்த அமைதியை நெருக்கமாகக் கொண்டுவர விரைவில் பேச்சுவார்த்தை மேசைக்கு வரத் தயாராக உள்ளது.
உக்ரைனியர்களைவிட வேறு யாரும் அமைதியை விரும்பவில்லை. நீடித்த அமைதியைப் பெற அதிபர் ட்ரம்பின் வலுவான தலைமையின் கீழ் பணியாற்ற நானும் எனது குழுவும் தயாராக இருக்கிறோம். உக்ரைனின் இறையாண்மையையும் சுதந்திரத்தையும் பராமரிக்க அமெரிக்கா எவ்வளவு உதவி செய்துள்ளது என்பதை நாங்கள் உண்மையிலேயே மதிக்கிறோம். இதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.