உலகம்

'அமைதியாகவே வந்தாள்;அமைதியாக சென்றுவிட்டாள்'-யூடியூப் நட்சத்திரமான 15வயது சிறுமி காலமானார்

'அமைதியாகவே வந்தாள்;அமைதியாக சென்றுவிட்டாள்'-யூடியூப் நட்சத்திரமான 15வயது சிறுமி காலமானார்

கலிலுல்லா

முதுமை கோளாறு நோயால் பாதிக்கப்பட்டிருந்த யூடியூபர் அடாலியா ரோஸ் வில்லியம்ஸ் தனது 15வயதில் காலமானார்.

அவர் 3வயதே இருக்கும்போதே 'ஹட்சின்சன்-கில்ஃபோர்ட் புரோஜீரியா (Hutchinson-Gilford progeria syndrome)என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 15வயதான அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் 'இந்த உலகத்தை விட்டு விடைபெறுகிறேன்' என எழுதியிருக்கிறார். அவரது இந்த பேஸ்புக் பதிவை 805,000 க்கும் மேற்பட்ட லைக் செய்துள்ளனர். 158,000 க்கும் மேற்பட்டோர் கமெண்ட் செய்துள்ளனர்.

''அமைதியாகவே வந்தாள், அமைதியாகவே சென்றுவிட்டாள். இருப்பினும், மில்லயன் கணக்கான மக்களின் மனதில் முத்திரை பதித்துவிட்டாள். அவளுக்கு இனி எந்த வலிகளும் இல்லை. இனி அவள் விரும்பிய பாடல்களுக்கு அவளால் நடமாடமுடியும்'' என்று அவரது குடும்பத்தினர் கருத்து பதிவிட்டுள்ளனர். ரோஸ் வில்லியம்ஸ் 3வயதாக இருக்கும்போது, முதுமையை துரிதப்படுத்தும் அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. 13 ஆண்டுகள் மட்டுமே அவரது ஆயுட்காலம் என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர் என 2018ம் ஆண்டு அளித்த பேட்டி ஒன்றில் அவரது தாய் தெரிவித்திருந்தார்.

"அடாலியா பிறந்தபோது, பிறந்து ஒருமாதம் ஆன குழந்தையை போல இருந்தாள். மருத்துவர்கள். அவளது வளர்ச்சியில் மகிழ்ச்சியடையவில்லை. இது முதலில் தோன்றிய அறிகுறிகளில் ஒன்றாகும், அதன் பிறகு அவளது வயிற்றில் உள்ள தோல் மிகவும் இறுக்கமாகவும், வித்தியாசமான தோற்றமாகவும் இருந்தது,” என்கிறார் அவரது தாய். டெக்ஸாசில் பிறந்த அடாலியா ரோஸ் கடந்த 2012ம் ஆண்டு முதல் யூடியூப்பில் வீடியோக்களை பதிவேற்றி வந்தார். அவர் தனது உடல்நலன் தொடங்கி ஃபேஷன் மற்றும் மேக்-அப் பயிற்சிகள் வரை அனைத்தையும் பதிவிட்டு வந்தார்.

யூடியூப்பில் அவருக்கு 2.91 மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களும், இன்ஸ்டாகிராமில் 379,000 க்கும் அதிகமான பாலோவர்ஸ்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.