உலகம்

இரவு பகல் பாராமல் பப்ஜி: கழுத்து நரம்பு பாதிக்கப்பட்டு உயிரிழந்த இளைஞர்!

webteam

பெற்றோர்கள் முதல் அரசாங்கம் வரை அனைவருக்கும் தற்போதைய  தலைவலியாக இருக்கிறது ட்ரெண்டிங் கேமான பப்ஜி. பள்ளி சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த விளையாட்டுக்கு அடிமையாகி வருவதாக அரசாங்கமே எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விளையாட்டு மூலம் நிறைய குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதாகவும், விளையாடுபவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவதாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. குஜராத் அரசு இந்த விளையாட்டை ஏற்கெனவே தடை செய்துள்ளது. இந்நிலையில் தெலங்கானாவில் ஒரு இளைஞரின் உயிரையே பப்ஜி பறித்துள்ளது.

தெலங்கானாவில் ஜாக்தியல் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் பப்ஜி விளையாட தொடங்கியுள்ளார். தொடர்ந்து விளையாடியதால் மெல்ல மெல்ல விளையாட்டுக்கு அடிமையான அந்த இளைஞர் ஒரு கட்டத்துக்கு பிறகு இரவு பகலாக விளையாடியுள்ளார். தொடர்ந்து குனிந்தபடியே விளையாடியதால் கழுத்து நரம்புகள் பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டாலும் அதிக நரம்புகள் பாதிக்கப்பட்டால் அந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். தற்போது உயிரிழந்த இளைஞனின் நண்பர்கள் பப்ஜி விளையாட்டின் அபாயம் குறித்து வீடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

சமீபத்தில் கர்நாடகாவில் கல்லூரி தேர்வு ஒன்றில் பாடம் தொடர்பாக எழுதாமல் பப்ஜி விளையாடுவது எப்படி என்று எழுதிய இளைஞர் மருத்துவமனையில் உளவியல் ரீதியாக சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.