உலகம்

20,000 முறைக்கும் மேல் தேனீக்களால் தாக்கப்பட்ட இளைஞர் - கோமாவிலிருந்து பிழைத்த அதிசயம்!

Sinekadhara

அமெரிக்காவில் 20,000 முறைக்கும் மேல் தேனீக்களால் கொட்டப்பட்ட இளைஞர் கோமா நிலைக்குச் சென்று பிறகு அதிர்ஷ்டவசமாக சுயநினைவு திரும்பி தற்போது வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

அமெரிக்காவிலுள்ள ஓகியோ மாகாணத்தைச் சேர்ந்தவர் ஆஸ்டின் பெல்லாமி. 20 வயது இளைஞரான இவர் வெள்ளிக்கிழமை எலுமிச்சை மரங்களின் கிளைகளை நறுக்க தனது நண்பருக்கு உதவியிருக்கிறார். அப்போது தவறுதலான தேன்கூடு ஒன்றை வெட்டிவிட்டார். அது ஆப்பிரிக்க கொலைகார தேனீக்களின் கூடு. உடனே அதிலிருந்த தேனீக்கள் ஒன்றுசேர்ந்து 20,000 முறைக்கும் மேல் ஆஸ்டினை கொட்டி தாக்கியது. ஆஸ்டினுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தும் அவர் செவ்வாய்கிழமை கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக கூறிவிட்டனர்.

ஆனால், அதிர்ஷ்டவசமாக புதன்கிழமை மீண்டும் சுயநினைவை திரும்ப பெற்றுவிட்டார். தற்போது அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார் ஆஸ்டினின் தாயார் ஷாவ்னா கார்டெர். அவருடைய மருத்துவ தேவைகளுக்காக நிதி திரட்ட ஆன்லைன் பக்கம் ஒன்றையும் அவர் தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து ஆஸ்டினின் பாட்டி பைல்லிஸ் எட்வாட்ர்ஸ் கூறுகையில், ’’ஆஸ்டின் மரக்கிளைகளை வெட்டத் தொடங்கியபோதுதான் தேனீக்கள் அங்கு வந்தன. அவைகளிடமிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள அவன் குனிந்தான். ஆனாலும் அவனால் முடியவில்லை. அவன் உதவி உதவி என்று ஓலமிட்டான். ஆனால் ஒருவராலும் உதவ முடியவில்லை. அவன் குடும்பமே கீழே நின்று நடப்பதை பார்த்தது. அவர்களையும் தேனீக்கள் தாக்கியதால் ஒருவராலும் அவனை காப்பாற்ற முடியவில்லை.

நான் ஏணியில் ஏறி, ஆஸ்டினிடம் செல்ல முற்பட்டேன். ஆனால் என்னையும் தேனீக்கள் சூழ்ந்துகொண்டதால் என்னாலும் போகமுடியவில்லை. இதை குறித்து போனில் கேட்ட கார்டெர் உடனடியாக மயங்கிவிட்டாள். இந்த விபத்தில் ஆஸ்டின் 30க்கும் மேற்பட்ட தேனீக்களை விழுங்கிவிட்டான். அதனை வெளியே எடுக்க மருத்துவர்களுக்கு ஒருநாளுக்கும் மேலானது. அவனது உடலுக்குள் இருந்த தேனீக்கள் ஞாயிறு காலைவரை அவனை உறிஞ்சிவிட்டது’’ என்று Fox 19-க்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆஸ்டின் விரைவில் குணமடைய வேண்டும் என மருத்துவர்கள் போராடிவருகின்றனர்.