உலகம்

பாகிஸ்தானை அதிரவைத்த பத்திரிகையாளர் கொலை... பின்னணியில் 'வேட்டை' சம்பவம்?!

PT WEB

பாகிஸ்தானில் பத்திரிகையாளர் ஒருவர் கொல்லப்பட்ட நிகழ்வு, புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலைக்கு பின்னணியில் இருக்கும் 'பறவை வேட்டை' என்னும் காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் கராச்சி நகரைச் சேர்ந்த பத்திரிகையாளர் நஜிம் ஜோகியோ, சமீபத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வாரம் கொலை செய்யப்படும் இரண்டாவது பத்திரிகையாளர் இவர். அதேநேரம், இந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட 10-வது பத்திரிகையாளர் என்று சொல்லப்படுகிறது. பத்திரிகையாளர் நஜிம் கொலை வழக்கு பாகிஸ்தானில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானின் அருகிவரும் ஒருவகை பறவை ஹவுபாரா பஸ்டர்ட் (Houbara bustard). பெரும்பாலும் அரபு நாடுகளிலும், பாகிஸ்தானிலும் வசிக்கும் இந்தப் பறவையை அரபு - வளைகுடா நாடுகளைச் சேர்ந்த அரச குடும்பங்கள் பெரிதும் விரும்பி உண்பது வழக்கம். இதற்குக் காரணம், இந்த பறவையில் இறைச்சி பாலியல் வேட்கையை தூண்டும் என்ற வலுவான நம்பிக்கை அவர்கள் மத்தியில் இருக்கிறது. இதற்காக இந்தப் பறவையை வேட்டையாடி வருகின்றனர்.

குறிப்பாக, அரபு நாடுகளைச் சேர்ந்த பலர் பாகிஸ்தானுக்கு வந்து இந்தப் பறவையை வேட்டையாடி வருகின்றனர். அதிகமாக வேட்டையாடப்பட்டதால் தற்போது ஹவுபாரா பஸ்டர்ட் பாகிஸ்தானில் அருகிவரும் பறவை இனம் என்று அறிவிக்கப்பட்டு, வேட்டையாடுவது அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை வெறும் கண்துடைப்புக்கான ஒரு நடவடிக்கை. உச்ச நீதிமன்ற தடையை மீறி பணக்கார வெளிநாட்டு பிரமுகர்களுக்கு பறவையை வேட்டையாட அனுமதி கொடுக்கப்படுகிறது.

பத்திரிகையாளர் நஜிம் ஜோகியோ, சட்டவிரோத இந்த வேட்டை தொடர்பாக அடிக்கடி செய்திகளை வெளியிட்டு வந்தவர், சில நாட்கள் முன் அரேபியர்கள் சிலர் ஹூபரா பஸ்டர்ட் பறவையை சட்டவிரோதமாக வேட்டையாடும் வீடியோவை ஆதாரமாக எடுத்து வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. சில தினங்கள் முன் வலைதளங்களில் நேரடியாக தோன்றி, ``சட்டவிரோத வேட்டையை வீடியோவாக எடுத்ததற்காக எனக்கு மிரட்டல்கள் வருகின்றன. இந்த மிரட்டல்களை கண்டு பயப்படப்போவதில்லை. நான் படம் பிடித்த வீடியோவையும் அழிக்கபோவதில்லை" என்று பேசியிருந்தார்.

இந்த நேரலை வீடியோ விட்ட அடுத்த நாள், உள்ளூர் தரகர் ஒருவர் தகவலின்படி, சிந்து மாகாண சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் நடந்த வேட்டையாடும் நிகழ்வை பற்றிய செய்தியை சேகரிக்க பத்திரிகையாளர் நஜிம் சென்றுள்ளார். அங்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் சட்டமன்ற உறுப்பினர் பண்ணை வீட்டில் நஜிம் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இவரின் கொலையில் அரபு நாட்டு தலைவர்களுடன் நெருக்கம் காண்பித்து வந்த பாகிஸ்தான் எம்பி ஜாம் அப்துல் கரீம் என்போருக்கு தொடர்பு இருப்பதாக நஜிம் சகோதரி புகார் கொடுத்துள்ளார்.

நஜிம் கொலை பாகிஸ்தான் பொதுமக்கள் மத்தியிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் #JusticeForNazimJokhio என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். இதனிடையே, பத்திரிகையாளர் நஜிம் போல கடந்த வாரம் கொலை செய்யப்பட்ட மற்றொரு பத்திரிகையாளர் கொலையிலும் இதே காரணங்கள் சொல்லப்படுகிறது. தொடர்ந்து பத்திரிகையாளர்கள் பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்டு வருவது அங்கு புதிய புயலை கிளப்பி இருக்கிறது.