yemen war  reuters
உலகம்

ஏமன் போர்| களமிறங்கிய பிரான்ஸ்.. அணுசக்தி கப்பலில் தீ! அடுத்தடுத்து அதிர்ச்சி!

ஏமனில் ஹவுதி தாக்குதல்களுக்கு எதிராக பிரான்ஸ் சவுதிக்கு ஆதரவாக களமிறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

PT WEB

ஏமனில் ஹவுதி அமைப்பின் தாக்குதல்களால் எண்ணெய் உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்ட நிலையில், பிரான்ஸ் ராணுவம் சவுதிக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் போர்க்கப்பலில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த கடற்படை வீரர்கள் போராடினர். சவுதி, துருக்கி, பாகிஸ்தான் நாடுகள் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவு செய்துள்ளன.

செய்தியாளர் - M.மீரா

ஏமனில் ஹவுதி அமைப்புக்கும், சவுதி அரேபியாவை ஆதரிக்கும் படைகளுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரான்ஸ் ராணுவம் சவுதிக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளதாக தெரிகிறது.

ஏமன் போர் தற்போது உள்நாட்டுப் பிரச்னையைத் தாண்டி, முக்கியமான எண்ணெய் வர்த்தக வழியான பாப் அல்-மண்டேப், சவூதி பாதுகாப்பு, செங்கடல் கப்பல் போக்குவரத்து மற்றும் பிராந்திய அரசியலுடன் தொடர்புடைய சர்வதேச நெருக்கடியாக மாறியுள்ளது. குறிப்பாக, எண்ணெய் வளமிக்க இடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள் ஹவுதிகள்.

yemen war

சவுதி அரேபியாவின் பல பகுதிகளை குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகள், க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக ஹவுதிகள் தெரிவித்துள்ளனர்.

சவுதி தரப்பில் இருந்து ஏமனில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக ஹவுதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சவுதியில் இருக்கும் Aramco எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது ஹவுதி அமைப்பு . எண்ணெய் உள்கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோன், சவூதி அரேபியாவின் எண்ணெய் முனையத்தைப் பாதுகாக்க ராணுவ வீரர்கள், ரேடார் அமைப்புகள் மற்றும் வான் பாதுகாப்பு உபகரணங்களை அனுப்ப முடிவு செய்துள்ளதாக அறிவித்திருந்தார். இந்த நடவடிக்கை நேரடியாகப் போரில் ஈடுபடுவதற்காக அல்ல என்றும், முக்கிய எண்ணெய் உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதே நோக்கம் என்றும் அவர் கூறியிருந்தார்.

warship

இதனைத் தொடர்ந்து அணுசக்தியில் இயங்கும் விமானம் தாங்கி போர்க்கப்பலான Charles de Gaulle-ஐ பிரான்ஸ் அனுப்பி வைக்கிறது.

இந் நிலையில் பிரான்ஸ் நாட்டின் முக்கியமான போர்க்கப்பலான Charles de Gaulle, Toulon துறைமுகத்தில் பராமரிப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கப்பலில் திடீரென தீப்பிடித்தது.

தீயை கட்டுப்படுத்த பிரான்ஸ் கடற்படை வீரர்கள் பல மணி நேரம் போராடினர். பின்னர் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பிரான்ஸ் கடற்படை தெரிவித்துள்ளது. கப்பலின் அணுசக்தி தொடர்பான பகுதிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட தகவலின்படி, கப்பலில் மேற்கொள்ளப்பட்டு வந்த பணியின்போது பயன்படுத்தப்பட்ட blowtorch கருவியால் தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

yemen war

இதற்கிடையே ஹவுதி தாக்குதல்களுக்கு சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கூட்டாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளன. சவுதியை பாதுகாக்க தேவையான படைகள் மற்றும் ராணுவ திறன்களை வழங்குவது குறித்து மூன்று நாடுகளும் ஒப்புக்கொண்டதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.