உலகம்

”சிட்டி ரோபோ” போல மனித உணர்வுகளை புரிந்துகொள்ளும் ரோபோவை அறிமுகம் செய்தது சியோமி நிறுவனம்!

ச. முத்துகிருஷ்ணன்

எந்திரன் படத்தில் வருவது போல மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் சிட்டி ரோபோ ஒன்றை சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

சியோமி நிறுவனம் 2022 ஆம் ஆண்டிற்கான அதன் மடிக்கக்கூடிய ஸ்மார்ஃபோனான “Mix fold 2” ஐ அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் கூடுதலாக “சைபர் ஒன்” எனும் மனித உருவ ரோபோ ஒன்றையும் அறிமுகம் செய்து பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தியது. இது சியோமி நிறுவனத்தின் 2வது ரோபோ ஆகும். கடந்த வருடம் இதே ஆகஸ்ட் மாதத்தில் சைபர்டாக் எனும் நான்கு கால்களில் நடக்கும் ரோபோ ஒன்றை சியோமி அறிமுகம் செய்தது.

அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெய் ஜுன் இந்த ரோபோவை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். சைபர் ஒன் ரோபோ, லெய் ஜுனிற்கு மலர்கொத்து ஒன்றை கொடுத்து கைத்தட்டல்களை அள்ளியது. பின்னர் சில விநாடிகள் நடந்துவிட்டு ஜூனுடன் அரட்டை அடிக்க துவங்கியது இந்த ரோபோ. பின்னர் அவருடன் ஒரு செல்ஃபிக்கு போஸ் கொடுத்தது.

இந்த ரோபோ உடனான உரையாடலை வீடியோவாக லெய் ஜூன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “சைபர் ஒன்னின் கதையானது அறிவார்ந்த ரோபோக்களின் துறையில் ஒரு புதிய மைல்கல் ஆகும். நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. ஆனால் அற்புதமான ஒன்று நடக்கப்போகிறது என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று அவர் கூறிப்பிட்டுள்ளார்.

மனிதர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளும் இந்த சைபர் ஒன் ரோபோ 52 கிலோ எடையும் 1.77 மீட்டர் உயரமும் கொண்டது. மணிக்கு 3.6 கி.மீ வேகத்தில் நடக்கும் இந்த ரோபோ கால் இயக்க சமநிலையை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தனது முகத்தில் இரண்டு கேமராக்களை கண்கள் போல கொண்டுள்ள இந்த ரோபோ, அதன் மூலம் மனிதர்களை அடையாளம் காண்கிறது. 45 வித்தியாசமான உணர்ச்சிகளை உணரும் தன்மை கொண்ட இந்த ரோபோவிற்கு இரண்டு மைக்ரோபோன்கள் காதுகளாகவும் செயல்படுகிறது. இதன் விலை 70-80 லட்சம் ரூபாய் இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.