கொரோனாவை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு உதவத் தயாராக உள்ளதாகச் சீன அதிபர் தெரிவித்துள்ளார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவருக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் நடந்துள்ளதாக பெய்ஜிங் ராய்டர் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தொலைப்பேசி உரையாடலின் போது சீன அதிபர் இருதரப்பு உறவுகளை மேம்படுத்த அமெரிக்கா கணிசமான நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன் என்று கேட்டுக் கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது. சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பின் மூலம் இந்தச் செய்தி தெரிய வந்துள்ளது.
தங்கள் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு மட்டுமே சரியான தேர்வு என்றும், கொரோனா வைரஸைக் கையாள்வதில் அமெரிக்காவுக்கு உதவ சீனா தயாராக உள்ளது என்றும் ஜி ஜின்பிங் கூறியுள்ளதாகச் சீன அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், இன்று உலகளவில் பரவி ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலியாக்கி வருகிறது. இதனால் உலகளவில் இதுவரை 24,000 க்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். இந்த அளவு இந்த வைரஸ் பரவியதற்குச் சீனா வெளிப்படைத்தன்மை இல்லாததே காரணம் என டிரம்ப் முன்பே குற்றஞ்சாட்டி இருந்தார். மற்றும் அமெரிக்க உயர் அதிகாரிகளும் குற்றம் சாட்டி இருந்தனர்.
இந்தப் பிரச்னை குறித்து சீனாவின் அதிகார தலைமையகமான பெய்ஜிங்கிற்கும் அமெரிக்கத் தலைமையகமான வாஷிங்டனுக்கும் இடையே சில மாதங்களாக வார்த்தை போர் நடந்து வருகிறது. தொடர்ந்து சீனாவைச் சீண்டும் விதமாக ட்ரம்ப் கருத்து கூறி வருகிறார். நீண்ட காலமாக நடந்த வார்த்தை போருக்கு மத்தியில் இந்த இருநாட்டுத் தலைவருக்கும் இடையில் உரையாடல் நடந்துள்ளது.
மேலும் சீன அதிபர் அமெரிக்காவுக்கு மருத்துவ ரீதியாக உதவ முன்வந்துள்ளார். இந்தப் பேச்சின் போது கொரோனா விசயத்தில் சீனா வெளிப்படைத்தன்மையாக உள்ளதாகவும் ஜி ஜின்பிங் கூறியுள்ளார். இதுவரை சீனாவில் 80,000 க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இருநாடுகளுக்கு இடையிலான வார்த்தைப் போரினை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.