model image
model image twitter
உலகம்

ஆபாச வீடியோ பகிர்வு; 2.31 லட்சம் இந்திய கணக்குகளை அதிரடியாக முடக்கிய X தளம்!

Prakash J

பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (வாங்கும் போது ட்விட்டர் ) தளத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு, அதில் பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்தி வருகிறார். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் எக்ஸ் தளத்தில் சிலர் ஆபாசப் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

குறிப்பாக, சிறார் ஆபாசப் படங்கள் அதிக அளவில் பகிரப்பட்டு வந்தன. இதுதொடர்பாக அதிக அளவில் புகார்களும் எக்ஸ் தளத்திற்குச் சென்றன. இந்நிலையில், இவ்வாறு ஆபாசப் புகைப்படங்களையும், சிறார் ஆபாச வீடியோக்களையும் பதிவிட்டதாக 2.31 லட்சம் கணக்குகளை எக்ஸ் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது.

2023 டிசம்பர் 26 முதல் இந்த ஆண்டு ஜனவரி 25 வரையிலான ஒரு மாத காலத்தில், சிறார் ஆபாசப் படங்களைப் பகிர்வது, அனுமதியின்றி எடுக்கப்பட்ட நிர்வாணப் படங்கள் பதிவிட்டவர்கள் ஆகியோரை கணக்கெடுத்து விதிமீறல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த இந்தியாவைச் சேர்ந்த சுமார் 2,31,215 கணக்குகளை எக்ஸ் சமூக வலைதளம் நீக்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

2021இல் இந்தியா சார்பில் கொண்டுவரப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப சட்டவிதிகளின்படி பதிவான 2,525 புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக எக்ஸ் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், இதுபோன்ற பல கணக்குகள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும், அந்தக் கணக்குளையும் நீக்கும் நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் எனவும் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் சுமார் 1,945 கணக்குகள் தங்கள் பக்கங்களில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவித்து பதிவிட்டவை என அதிர்ச்சிகரமான தகவலும் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே 2023இல் நவம்பர் 26 முதல் டிசம்பர் 25 வரை இந்தியாவில் 2.27 லட்சம் எக்ஸ் கணக்குகள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எக்ஸ் நிர்வாகம் ஒவ்வொரு மாதமும் பயனர்களிடம் இருந்து புகார்களைப் பெற்றுவருகிறது. வீதிமீறலின் தன்மையைப் பொறுத்து, நிரந்தர மற்றும் தற்காலிக நீக்கம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.