பிரபல மல்யுத்த வீரர் கெயின் அமெரிக்காவில் நடைபெற்ற மேயருக்கான வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
டபுள்யூடபள்யூஇ (WWE) என்ற பொழுதுபோக்கு மல்யுத்தப்போட்டியில் பிரபலமான சண்டைக்காரர் கெயின். இவரது இயற்பெயர் க்ளென் ஜாக்கப்ஸ். முகத்தில் முகமூடி, சிவப்பு நிற ஆடை, சுற்றி நெருப்பு கிளம்பும் போது மல்யுத்த சண்டைக்கு என கெயின் வருவதை பார்க்கும் ரசிகர்களுக்கு மிரட்டலாக இருக்கும். ஆக்ரோஷமாக சண்டைபோடும் இவர், 7 அடி உயரம் கொண்டவர். நீண்ட வருடங்களாக முகமூடியுடன் மல்யுத்தப்போட்டியில் சண்டைப் போட்டு வந்த இவர், ஒரு கட்டத்தில் முகமூடி இன்றி சண்டை போட்டுவந்தார். அதே மல்யுத்தப்போட்டியில் பங்கேற்கும் பிரபல வீரர் அண்டர் டேக்கர் என்பவர், இவரது சகோதரர்.
மல்யுத்தம் என்ற வகையில் பிரபலான கெயின், சமீபத்தில் அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் உள்ள நாக்ஸ் கவுண்டி நகரத்தில் நடைபெற்ற மேயருக்கான வேட்பாளர் தேர்தலில் குடியரசுக் கட்சியில் போட்டியிட்டார். பிரபலமான நபர் என்பதால், இவருக்கு மக்கள் வரவேற்பு குவிந்தது. தேர்தல் முடிந்து தற்போது வெளிவந்துள்ள முடிவுகளின் படி, கெயின் 17 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து குடியரசுக் கட்சியின் மேயர் வேட்பாளராக அவர் தேர்வாகியுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர், ‘மக்கள் எனக்காக வந்து வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். எனது ஆதரவாளர்கள் மற்றும் எனது அணியினரால் இது சாத்தியமானது. ஒரு வரலாற்று வெற்றியை பெற்றுத்தந்த அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.