உலகம்

”கடைசி காலத்திலாவது சுதந்திரம் கிடைக்கட்டும்..” - உலகின் துயரமான கொரில்லாவின் சோகக் கதை!

JananiGovindhan

தாய்லாந்தின் உயரமான ஷாப்பிங் மாலில் உள்ள மிருகக்காட்சி சாலையில் கிட்டத்தட்ட 32 ஆண்டுகளாக அடைபட்டு கிடக்கும் உலகின் சோகமான கொரில்லாவை விடுவித்து அதன் சக கொரில்லாவோடு சேர்ப்பதற்கு விலங்குகள் நல அமைப்பு பல ஆண்டுகளாக போராடி வருகிறது.

பேங்காக்கில் உள்ள Pata என்ற மிக உயரமான ஷாப்பிங் மாலில் உள்ள zoo-ல் தான் ஜெர்மனியில் இருந்து கொண்டு வரப்பட்ட Bua Noi என்ற ஆண் கொரில்லா ஒரு வயதாக இருக்கும் போது 1990ம் ஆண்டில் அடைக்கப்பட்டிருக்கிறது. Bua Noi என்றால் சிறிய தாமரை என்று பொருளாம்.

ஆரோக்கியமான ஒரு கொரில்லாவின் வாழ்நாள் 35 முதல் 40 ஆண்டுகள் வரையே இருக்கும் என கூறப்பட்டு வரும் நிலையில், Bua Noi தனது வாழ்நாளை 32 ஆண்டுகளாக சிறையிலேயே கழித்துவிட்டதால் அதன் இறுதி காலத்திலாவது அதற்கு சுதந்திரம் வழங்க வேண்டும் என பீட்டா உள்ளிட்ட பல விலங்குகள் நல அமைப்புகள் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

இதற்காக அந்த ஷாப்பிங் மாலின் உரிமையாளரிடம் பீட்டா அமைப்பும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. ஆனால், கொரில்லாவை விடுவிக்க 30 மில்லியன் தாய் பாட் அதாவது இந்திய மதிப்பில் 6 கோடி ரூபாய் கேட்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து பேசியுள்ள தாய்லாந்தின் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வரவுத் சில்பா - அர்ச்சா, “bua noi தனி சொத்தாக கருதப்படுவதால் இதில் தலையிட முடியாத நிலையில் இருக்கிறோம். ஏனெனில் ஒரு வயதாக இருக்கும் போது 3 மில்லியன் தாய் பாட்டிற்கு அந்த கொரில்லா வாங்கப்பட்டிருக்கிறது.

ஆகவே புவா நொய் கொரில்லாவை விடுவிக்க அதன் உரிமையாளர் கேட்ட தொகையை திரட்ட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் பெரிய தொகையாக இருப்பதால் சிரமமாக இருக்கிறது. அதே சமயத்தில் கொரில்லாவை விற்க விரும்பாத அந்த உரிமையாளர், விலங்குகள் அமைப்பின் கோரிக்கையின் பேரில் ஒப்புக்கொண்டாலும் மேலும் தொகையை அதிகப்படுத்துவிடுகிறார்” என்றும் கூறியுள்ளார்.