ROBO REUTERS
உலகம்

‘Robot Vs Human’ சண்டை.. ஓங்கி ஒரு 'பன்ச்' விட்ட ரோபோ.. மனிதரைத் தூக்கி வீசிய பயங்கர காட்சி!

ரோபோ மனிதரை தாக்கி கீழே வீழ்த்துகிறது... இதுவரை ஹாலிவுட் திரைப்படங்களில் மட்டுமே பார்த்த இப்படியொரு காட்சி, தற்போது நிஜத்திலேயே அரங்கேறியுள்ளது!

PT WEB

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடந்த வித்தியாசமான MMA சண்டையில், சுமார் 6 அடி உயரம் கொண்ட மனித உருவ ரோபோவுக்கு எதிராக சமூக வலைதள பிரபலமான ஃபிராங்கி லபென்னா களமிறக்கப்பட்டார். சண்டையின்போது ரோபோ கொடுத்த அதிரடி கிக்கால் லபென்னா தடுமாறி கீழே விழுந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இந்த நிகழ்வை REK எனப்படும் Robot Entertainment Kombat அமைப்பு நடத்தியுள்ளது. இந்தச் சண்டையில் ஃபிராங்கி லபென்னாவுக்கு எதிராக களமிறக்கப்பட்ட ரோபோ, EngineAI நிறுவனத்தின் T800 humanoid robot வகையை சார்ந்தது எனச் சொல்லப்படுகிறது

ROBO VS HUMAN

சண்டை தொடங்கியபோது லபென்னா ரோபோவை நோக்கி தாக்குதலை மேற்கொண்டுள்ளார். அதன்பிறகு, ரோபோ தனது கால்களால் வேகமாகத் தாக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ரோபோவின் ஒரு வலுவான கிக் காரணமாக லபென்னா தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனால், ரோபோ மனிதரை வீழ்த்தியதாக இந்த வீடியோவைப் பார்த்த பலரும் ஆச்சர்யத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.

சிலர், இதை மனிதர்களுக்கும் ரோபோக்களுக்கும் இடையிலான எதிர்காலப் போட்டிகளுக்கான தொடக்கமாக பார்த்து வரும் நிலையில், இன்னும் சிலர் இதுபோன்ற சண்டைகள் எந்த அளவுக்கு பாதுகாப்பானவை என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர். ஆனால், இந்தச் சம்பவத்தில் மிகவும் முக்கியமான ஒரு விஷயம் உள்ளது. லபென்னாவுடன் சண்டையிட்ட ரோபோ முழுமையாக தன்னாட்சி முறையில் செயல்படவில்லை. அதனை ஒரு மனிதர் remote control மூலம் இயக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கூண்டுக்குள் ரோபோ இருந்தாலும், அதன் அசைவுகள் மற்றும் தாக்குதல்களை பின்னால் இருந்து ஒரு மனிதர் கட்டுப்படுத்தியுள்ளார்.

ROBO

இதனால், இது மனிதருக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான நேரடிச் சண்டை என்று கூறுவதற்கு பதிலாக, மனிதரால் இயக்கப்படும் மனித உருவ ரோபோவுக்கும், ஒரு மனிதருக்கும் இடையிலான செயல் விளக்கம் என்றே பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மனிதர்களைப் போலவே அசைந்து, தாக்குதல் நடத்தக்கூடிய திறன் கொண்ட ரோபோக்களின் வளர்ச்சி குறித்து இந்தச் சம்பவம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற ரோபோக்கள் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குத் துறைகளில் எந்த அளவுக்கு பயன்படுத்தப்பட உள்ளன என்பதும் தற்போது பேசுபொருளாகியுள்ளது.