உலகம்

”இரண்டாம் உலகப் போரின் உளவாளி”... இந்திய வம்சாவளி பெண்ணுக்கு லண்டனில் நினைவுத்தகடு!

”இரண்டாம் உலகப் போரின் உளவாளி”... இந்திய வம்சாவளி பெண்ணுக்கு லண்டனில் நினைவுத்தகடு!

Veeramani

லண்டனின் உள்ள தொண்டு நிறுவனம் புளூ பிளேக் எனப்படும் நீலத்தகடுகள் திட்டம் மூலமாக முக்கியமான கட்டிடங்களை சிறப்பு செய்துவருகிறது. இப்போது முதல் முறையாக இரண்டாம் உலகப்போரில் உளவாளியாக இருந்த இந்திய வம்சாவளிப்பெண் நூர் இனாயத் கான் இந்த நினைவுத்தகடுளை பெறுகிறார்.

மத்திய லண்டனில் உள்ள இரண்டாம் உலகப் போரின் உளவாளி நூர் இனாயத் கானின் இல்லத்திற்கு ப்ளூ பிளேக் எனப்படும் நீலத்தகடுகள் சிறப்பு வழங்கப்பட்டுள்ளது.1943 ஆம் ஆண்டில் நாஜி ஆக்கிரமித்த பிரான்சுக்கு பிரிட்டனின் சிறப்பு செயல்பாட்டு நிர்வாகியின் (SOE) இரகசிய வானொலி ஆபரேட்டராகப் புறப்படுவதற்கு முன்பு அவர் லண்டனின் ப்ளூம்ஸ்பரியில் உள்ள 4 டாவிடன் தெருவில் நூர் இனாயத் கான் வாழ்ந்த வீடு உள்ளது.

18 ஆம் நூற்றாண்டில் மைசூரை ஆட்சிசெய்த திப்பு சுல்தானின் வம்சாவளியை சேர்ந்த இந்திய சூஃபி துறவி ஹஸ்ரத் இனாயத் கானின் மகள்தான் நூர். இவர் பிரிட்டனின் ரகசிய உளவாளியாக இருந்து 1944 இல் டச்சாவ் வதை முகாமில் கொல்லப்பட்டார். அப்போது கொல்லப்பட்டவர்கள் குறித்த அடையாளம் எதுவும் வெளிப்படுத்தவில்லை, இவரது உண்மையான பெயர் கூட அப்போது அவர்களுக்கு தெரியவில்லை. "நூர் இனாயத் கான் தனது பணிக்காக கடைசியாக இந்த வீட்டை விட்டு வெளியேறியபோது, ஒரு நாள் தான் துணிச்சலின் அடையாளமாக மாறுவோம் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்" என்று வரலாற்றாசிரியரும் 'ஸ்பை இளவரசி: நூர் இனாயத் கானின் வாழ்க்கை'  என்ற நூலில் ஆசிரியருமான ஷ்ரபானி பாசு கூறினார். .

“அவர் ஒரு நிகரற்ற உளவாளி. ஒரு சூஃபி என்ற முறையில் அவர் அகிம்சை மற்றும் மத நல்லிணக்கத்தை நம்பினார். ஆயினும் தன்னை வளர்த்தெடுத்த நாட்டுக்காக பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் அவர் தனது உயிரைத் தயக்கமின்றி வழங்கினார். நீல நிற தகடுடன் நினைவுகூரப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண்மணி நூர் இனாயத் கான் என்பது பொருத்தமானது. இந்த வீட்டின் வழியாக மக்கள் நடந்து செல்லும்போது, நூரின் கதை எதிர்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்" என்றும் பாசு கூறினார்.

SOE என்பது 1940 ஆம் ஆண்டில் பிரிட்டனின்  பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலால் அமைக்கப்பட்ட ஒரு தன்னிச்சையான பிரிட்டிஷ் ரகசிய சேவையாகும், மேலும் நூர் நாஜி ஆக்கிரமிப்பு பிரான்சிற்கு அனுப்பப்பட்ட முதல் பெண் வானொலி ஆபரேட்டராக ஆனார். மகாத்மா காந்தி மற்றும் அம்பேத்கர் ஆகியோர் லண்டனில் தங்கியிருந்த கட்டிடங்கள் இதேபோன்ற நீல நிற தகடுகளுடன் கெளரவிக்கப்பட்டுள்ளது.