Most expensive ice cream
Most expensive ice cream @GWR twitter page
உலகம்

‘வெயிலுக்கு ஒரு ஐஸ்கிரீம் சாப்பிடலாம்னா ரூ.5 லட்சமா’ - கின்னஸ் சாதனையும் உலகின் காஸ்ட்லி ஐஸ்கிரீமும்

PT WEB

கோடைக்காலத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இதமாகவும் பலரது விருப்பமாகவும் இருப்பது குளிர்ச்சியான ஐஸ்கிரீம் தான். பலர் இந்த குளிர் மற்றும் வெல்வெட் போன்ற பதத்தை வெவ்வேறு சுவைகளில் அனுபவிக்கின்றனர். அப்படி நீங்கள் ஐஸ்கிரீம் சாப்பிட நினைத்து ஒரு கடைக்கு செல்கிறீர்கள், அங்கு ‘ஒரு ஐஸ்கிரீமின் விலை ரூபாய் 5 லட்சம் என்று சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்? இவ்வளவு காசுக்கு யாராச்சும் ஐஸ்கிரீம் வாங்குவாங்களா? இல்ல விப்பாங்களா?’ என நீங்கள் யோசிக்கலாம். உண்மையில் ஐந்து லட்சம் ரூபாயில் ஒரு ஐஸ்கிரீம் ஜப்பானில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையுயர்ந்த ஐஸ்கிரீமின் பெயர் ‘பியாகுயா’.

Ice Cream

ஜப்பான் ஐஸ்கிரீம் நிறுவனமான செல்லாடோ விலையுயர்ந்த மற்றும் அரிய பொருள்களை பயன்படுத்தி ஒரு விதிவிலக்கான, உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீமை உருவாக்கியுள்ளது. இதன் விலை 8,73,400 ஜப்பானிய யென். இந்திய மதிப்பில் 5.2 லட்சம் ரூபாய். இந்த காஸ்ட்லி ஐஸ்கிரீம் இத்தாலியிலுள்ள அல்பா நகரில் மட்டுமே பிரத்யேகமாக கிடைக்கும். இதில் அரிதான வெள்ளை நிற டிரஃபில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ஒரு கிலோ 2 மில்லியன் ஜப்பானிய யென், இந்திய மதிப்பில் 11.9 லட்சம் ரூபாய்.

அடுத்து சேக் லீஸ் என்ற ஒருவகை சீஸ் இதில் சேர்க்கப்படுகிறது. சேக் என்பது புளித்த அரிசியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஒரு மதுபான வகை. இந்த சேக் லீஸின் சுவையில் அந்த மதுபானத்தின் சுவை இருக்குமாம். இதனையடுத்து பார்மிகியானோ ரெக்கியானோ என்ற மற்றொரு சீஸ் வகையும் இதில் சேர்க்கப்படுகிறது. இது கொஞ்சம் கெட்டியான உலர்ந்த சீஸ். இதில் பழங்களின் சுவை இருக்கும். இறுதியாக இந்த ஐஸ்கிரீமில் உண்ணக்கூடிய தங்க இதழ் சேர்க்கப்படுகிறது. இவை அனைத்தும் சேர்த்துதான் இந்த ஐஸ்கிரீமை உலகின் மிக காஸ்ட்லி ஐஸ்கிரீமாக மாற்றியுள்ளது. இதை உலகின் விலையுயர்ந்த ஐஸ்கிரீமாக கின்னஸ் புத்தகமும் அங்கீகரித்துள்ளது.

இதை பற்றி பேசியுள்ள செல்லாட்டோ பணியாளர் ஒருவர், “ஜப்பானிய மற்றும் ஐரோப்பிய மூலப்பொருள்களை இணைத்து ஒரு புதிய சுவையில் ஐஸ்கிரீம் தயாரிக்க வேண்டும் என நினைத்து உருவாக்கப்பட்டதுதான் இந்த ‘பியாகுயா’ ஐஸ்கிரீம். இந்த ஐஸ்கிரீமில் நாங்கள் நினைத்த சுவையை அடைய பல முயற்சிகளை மேற்கொண்டோம். சுமார் ஒன்றரை ஆண்டுகள் மேற்கொண்ட உழைப்பின் பலனாக இந்த ஐஸ்கிரீம் தாயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு கின்னஸ் உலக சாதனை பட்டம் கிடைத்ததன் மூலம் எங்களின் முயற்சிக்கு மதிப்பு கிடைத்துள்ளது” என மகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார்.

கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த ஐஸ்கிரீமின் புகைப்படத்துடன் விவரங்கள் பதிவிடப்பட்டுள்ளன. இந்த போஸ்ட் வெளியான சில மணி நேரங்களில் இதை 35,000-க்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.

பலரும் இதன் விலையை பார்த்து வியப்படைவதாக கருத்து தெரிவித்துள்ளனர். இன்னும் பலர் இந்த ஐஸ்கிரீமுக்கு எதிரான கருத்துகளையும் பதிவிட்டுள்ளனர்.