உலகம்

அது என்ன ’pink diamond’? - உலகிலேயே மிகப்பெரிய பிங்க் வைரம் இதுதானா?

Sinekadhara

ஆப்ரிக்காவில் 170 காரட் எடைகொண்ட பிங்க் நிற வைரம் கண்டறியப்பட்டுள்ளது. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய பிங்க் வைரம் என கூறியிருக்கிறது அந்நாட்டு நிறுவனம். 

கடந்த 300 ஆண்டுகளில் கண்டறியப்பட்ட வைரங்களில் உலகிலேயே இதுதான் மிகப்பெரியது என்று கூறியுள்ளது ஆஸ்திரேலிய சுரங்க நிறுவனம். இந்த வைரம் ஆப்ரிக்கா கண்டத்திலுள்ள அங்கோலா நாட்டின் லுகாபா வைர நிறுவனத்தால் கண்டறியப்பட்டுள்ளது. கண்டறியப்பட்ட இடத்தின் நினைவாக அந்த வைரத்திற்கு ‘’லுலோ ரோஸ்’’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வைரம்தான் உலகளவில் கண்டறியப்பட்ட பிங்க் நிற வைரங்களில் மிகப்பெரியது என்று கூறியிருக்கிறது லுகாபா. அங்கோலா தேசிய வைர வர்த்தக நிறுவனத்தால் நடத்தப்படும் ஏலத்தில் இந்த வைரம் ஏலம் விடப்படும் என்றும் கூறியிருக்கிறது.

இதுகுறித்து அங்கோலா நாட்டின் கனிம வளத்துறை அமைச்சர் டயமெண்டினோ அசெவெடோ கூறுகையில், வைர சுரங்க போட்டியில் எங்கள் நாடு முக்கியப்பங்கு வகிக்கிறது என்பதை இந்த வரலாற்று கண்டுபிடிப்பு காட்டுகிறது என்று கூறியுள்ளார். மேலும் இந்த கண்டுபிடிப்பு எங்களுடைய வளர்ந்துவரும் வைர சுரங்க நிறுவனங்களின் முக்கியத்துவம் மற்றும் அர்ப்பணிப்பை உலகுக்கு காட்டுகிறது என்றும் கூறியுள்ளார். இதற்கிடையே லுகாபா நிறுவனம், ’’இது எங்களுக்கு கிடைத்த பரிசு. மற்றொரு வரலாற்று கண்டுபிடிப்பின்மூலம் நாங்கள் பெருமையடைந்திருக்கிறோம். இதன்மூலம் எங்களுடைய நிறுவனம் விரிவடையும் என்று நம்புகிறோம்’’ என்று கூறியிருக்கிறது.

வரலாற்று சிறப்புமிக்க பிங்க் வைரத்திற்கு முன்பு, "4வது பிப்ரவரி கல்" என்று அழைக்கப்படும் 404 காரட் பாறை அங்கு கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.