பாஸ்போர்ட்டின் சக்தியை தீர்மானிப்பதில் சர்வதேச உறவுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வலுவான இராஜதந்திர உறவுகளைக் கொண்ட நாடுகள் பெரும்பாலும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளைக் கொண்டுள்ளன. அவை தங்கள் குடிமக்களுக்கு மற்ற நாடுகளுக்கு விசா இல்லாத விரிவான அணுகலை வழங்குகின்றன. அந்த வகையில், உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. ஒரு நாட்டின் பாஸ்போர்ட் மூலம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பதன் அடிப்படையில் இந்த தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது.
அந்த வகையில், 2024ஆம் ஆண்டில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள் பட்டியலில், முதல் இடத்தைத் தவிர அடுத்த 19 இடங்களில் ஐரோப்பிய நாடுகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. எனினும், ஐரோப்பிய நாடுகளைத் தாண்டியும் தொடர்ந்து நான்காவது ஆண்டாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. UAE பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் உலகின் 90 சதவீத பகுதிகளை அணுக முடியும். அவர்கள் 133 நாடுகளை விசா இல்லாமல் சென்றடைய முடியும் மற்றும் 47 நாடுகளில் விசா-ஆன்-அறைவல் (Visa-On-Arrival) மூலம் அனுமதி பெற முடியும். இதனால், UAE பாஸ்போர்ட் 180 என்ற மொபிலிட்டி ஸ்கோர் பெற்றுள்ளது.
இந்தப் பட்டியலில் UAEக்கு அடுத்து ஸ்பெயின், ஜெர்மனியை (ஐந்தாவது) முந்தி உலகின் இரண்டாவது சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக மாறியுள்ளது. அதேநேரத்தில் ஃபின்லாந்து பிரான்ஸ் (நான்காவது), பெல்ஜியம் (ஆறாவது) மற்றும் இத்தாலி (ஏழாவது) மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்தப் பட்டியலில் பிரான்ஸ் பாஸ்போர்ட்டும் சக்தியானதாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், இங்கிலாந்தின் பாஸ்போர்ட் தரவரிசையில் மேலும் கீழிறங்கியுள்ளது. அது, 32வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்து பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 125 நாடுகளுக்கு விசா இன்றியும், 49 நாடுகளுக்கு விசா ஆன் அறைவல் மூலமாகவும் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், அமெரிக்கா 38வது இடத்தில் உள்ளது. அமெரிக்க குடியுரிமையாளர்கள் 123 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம். மேலும் 50 நாடுகளில் Visa-On-Arrival மூலம் அனுமதி பெற முடியும். அதேநேரத்தில், அமெரிக்க பாஸ்போர்ட் அதன் மிகப்பெரிய போட்டியாளரான சீனாவைவிட சக்தி வாய்ந்ததாக உள்ளது. சீனா, 110வது இடத்தில் உள்ளது.
தென்கொரியாவின் கடவுச்சீட்டு, கடந்த ஆண்டு தரவரிசையுடன் ஒப்பிடுகையில், 17வது இடத்தில் இருந்து 21வது இடத்திற்குச் சரிந்தாலும், ஆசியாவிலேயே வலுவானதாக உள்ளது. ஜப்பான் (25 வது), சிங்கப்பூர் (30வது) ஆகியவை அடுத்த சக்திவாய்ந்த ஆசிய பாஸ்போர்ட்களாக உள்ளன. இந்தப் பட்டியலில் இந்தியாவின் பாஸ்போர்ட் 82வது இடத்தில் உள்ளது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 62 நாடுகளுக்கு பயணம் செய்ய முடியும்.
மறுபுறம், சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக், சோமாலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பலவீனமான பாஸ்போர்ட்டில் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. சிரியாவில் வசிப்பவர்களுக்கு, ஒன்பது நாடுகளுக்கு மட்டும் விசா இல்லை. 31 நாடுகளுக்கு வருகையின்போது விசா தேவைப்படுகிறது. 158 நாடுகளுக்குப் பயணம் செய்வதற்கு முன் விசா தேவை.
இந்தப் பட்டியலின் தரவரிசை குறித்து ஆர்டன் கேபிடல் இணை நிறுவனர் Hrant Boghossian, “வியக்கத்தக்க வகையில், ஐரோப்பிய பாஸ்போர்ட்கள் அமெரிக்கா மற்றும் சீனா போன்ற பெரிய பொருளாதாரங்களைவிடச் சிறந்த தரவரிசையில் உள்ளன. பால்கனில் உள்ள அனைத்து நாடுகளும் இந்த ஆண்டு தங்கள் நடமாட்டத்தில் வளர்ச்சியை அடைந்துள்ளன. தேர்தல்கள் மற்றும் மோதல்கள் உள்ளிட்ட புவிசார் அரசியல் காரணிகள் உலகளாவிய இயக்கத்தை தொடர்ந்து பாதிக்கின்றன. மேலும் விசா இல்லாத ஒப்பந்தங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்புகளையும் சில நாடுகள் அங்கீகரிக்கின்றன” எனத் தெரிவித்துள்ளார்.