உலகம்

போதும் இந்த தனிமை.. புதுவாழ்வை தொடங்கவுள்ள காவன் யானை!

webteam

யானை பிரியர்களுக்கு பாகிஸ்தானின் காவன் யானையை தெரியாமல் இருக்காது. சுவரில் தலையை முட்டி நிற்கும் காவன் யானையின் புகைப்படம் மிகப்பிரபலம். பார்த்தாலே தனிமையின் வலியை உணரச்செய்யும் அந்த புகைப்படத்தை பார்த்து கலங்காதவர்களே இருக்க முடியாது. யானைகளே இல்லாத பாகிஸ்தான், 1985ம் ஆண்டு ஒருவயதான காவன் யானைக்குட்டியை இலங்கையிடம் இருந்து பெற்றது. நாட்டிற்கு வந்த செல்லப்பிள்ளையை இஸ்லாமாபாத் மிருகக்காட்சி சாலை சிறப்பாகவே கவனித்தது.

காவன் யானை வளர்ந்தது. காவனுக்கு துணையாக இலங்கையிடம் இருந்து 1990ல் சஹோலி பெண் யானை ஒன்றும் வரவழைக்கப்பட்டது. இரு யானைகளும் மிருகக்காட்சி சாலையில் வளர்ந்து வந்தன. அனைத்தும் சிறப்பாகவே கிடைத்தாலும் பாகிஸ்தானின் கடும் வெப்பம் யானைகளுக்கு சிக்கலாகவே இருந்தது. இதன் தாக்கமாக சஹோலி உயிரிழந்தது.

ஜோடியாக சுற்றித்திரிந்த காவன், சஹோலியின் இறப்புக்கு பின்னர் தனிமையில் வாடியது. தன்னை தனிமைக்குள் சிறைப்படுத்திக்கொண்டது. தன்னுடைய கொட்டடைகையை விட்டு அதிகம் வெளிவராத காவன், சுவரில் தலையை முட்டி சோகமாக நிற்கும். தனிமை காவன் யானையை மூர்க்கத்தனமாகவும் மாற்றியது. அதிக வெப்பம், தனிமை என காவன் யானையின் செயல்பாடுகள் அவ்வப்போது மதம் பிடிப்பதுபோல மாறின. யானையின் தனிமையை உணர்ந்த தன்னார்வலர்களும், விலங்கியல் ஆர்வலர்களும் யானைக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

யானையை அதன் சூழலுக்கு ஏற்ற ஒரு சரணாலயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். குறைந்தபட்சம் அதற்கு ஒரு துணை யானையையாவது கொண்டு வர வேண்டும் என்றும் குரல் கொடுத்தனர். கோரிக்கைகள் சரணாலயத்தின் செவிக்கு சேராததால், நீதிமன்றம் வரை சென்றது காவன் பிரச்னை. காவனின் நிலையை ஆராய்ந்த நீதிபதிகள், காவனை விடுவிக்கும்படி தீர்ப்பளித்தனர்.

இந்த நிலையில் காவன் யானை கம்போடியாவில் உள்ள சரணாலயத்துக்கு செல்லவுள்ளது. தற்போது 35 வயதான காவனை ஆடல் பாடலுடன் அனுப்பி வைக்க விலங்கியல் ஆர்வலர்கள் முடிவு செய்துள்ளனர். ''நாங்கள் உன்னை மிஸ் செய்வோம் காவன்'' என்ற வாசகத்துடன் தினம் தினம் மகிழ்ச்சியான பிரிவு உபச்சார விழா நடைபெறுகிறது.

அதேவேளையில் விமானத்தின் பிரத்யேக கூண்டு மூலம் பறக்கவுள்ள காவனுக்கு சிறப்பு பயிற்சிகளும், மருத்துவ பரிசோதனைகளும் நடைபெற்று வருகின்றன. நவம்பர் 29ம் தேதி விமானம் மூலம் கம்போடியா சென்று புதுவாழ்வை தொடங்கவுள்ளது காவன். உலகின் தனிமையான யானை என்று பெயரெடுத்த காவன் இனியாவது தன்னுடைய மீதி வாழ்வை மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Photos: Dailymail