கொரோனா தாக்காமல் இருக்க, மது அருந்துவது, புகைப்பிடிப்பது, அதிக சர்க்கரை உள்ள குளிர்பானங்கள் ஆகியவற்றை குறைத்துக் கொள்ளுமாறு மக்களுக்கு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். உலகமே இக்கட்டான சூழ்நிலைகளைச் சந்தித்து வரும் நிலையில், சீனாவின் வுகான் மாகாணத்தில் நேற்று கொரோனாவுக்கு புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என கிடைத்துள்ள தகவல் ஆறுதல் அளிப்பதாக தெரிவித்தார்.
சுகாதார வசதிகள் குறைவாக உள்ள நாடுகள் கொரோனாவால் அதிக பாதிப்பை சந்திக்கும் என எச்சரித்துள்ளதையும் அவர் குறிப்பிட்டார். மேலும் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் போதுமான அளவு கிடைக்க உலகச் சுகாதார அமைப்பு பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் சமூக ஒன்று கூடல்களை தவிர்க்குமாறும் டெட்ரோஸ் வலியுறுத்தினார்.
மது அருந்துவது, புகைபிடிப்பது, சர்க்கரை அதிகமுள்ள குளிர்பானங்களை உட்கொள்வதை குறைத்துக் கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தினார்.