உலகம்

mass lay off-ல் இணைந்த மியூசிக் நிறுவனம்.. spotify போல ரெஸ்யூம் தயாரித்த பெண்ணும் டிஸ்மிஸ்

JananiGovindhan

உலகின் ஜாம்பவான்களாக இருக்கும் அமேசான், ட்விட்டர், கூகுள், மைக்ரோசாஃப்ட், மெட்டா போன்ற ஐ.டி. மற்றும் டெக் நிறுவனங்கள் அதிரடியாக தங்களது பணியாளர்களை வேலையில் இருந்து தூக்கி வருவதால் எப்போது என்ன நடக்கும் என்றே தெரியாமல் ஊழியர்கள் விழிப் பிதுங்கி போயிருக்கிறார்கள்.

கொத்து கொத்தாக ஆயிரக்கணக்கான ஊழியர்களை டெக் நிறுவனங்கள் நீக்கி வரும் நிலையில், சிறு, குறு நிறுவனங்களும் தனது பங்குக்கு நூற்றுக்கணக்கில் பணி நீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் 207 மில்லியன் ஆக்ட்டிவ் பயன்பாட்டாளர்களை கொண்ட உலகின் முன்னணி மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவையை வழங்கும் ஸ்பாட்டிஃபையும் தற்போது பணி நீக்க நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.

அதன்படி ஒட்டுமொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 6 சதவிகிதம் பேரை நீக்கியிருக்கிறது ஸ்பாட்டிஃபை. அதாவது 600 பேரை வேலையில் இருந்து தூக்கியிருக்கிறது. இது அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது.

இதுகுறித்து ஊழியர்களுக்கு ஸ்பாட்டிஃபை நிறுவன CEO டேனியல் அனுப்பிய இ-மெயிலில், “செலவினங்களை முறைப்படுத்தவே இந்த பணிநீக்கம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. கடினமான முடிவுதான். ஆனால் தவிர்க்க முடியாதது” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த நிலையில், ஸ்பாட்டிஃபையில் வேலைக்கு சேர்வதற்காக அதன் அப்ளிகேஷனில் இருப்பது போன்று கிரே மற்றும் பச்சை நிறத்தில் தன்னுடைய ரெஸ்யூமை தயாரித்து பணியில் சேர்ந்த பெண்ணையும் ஸ்பாட்டிஃபை பணி நீக்கம் செய்திருக்கிறது.

இது குறித்து மிகுந்த வருத்ததுடன் அந்த பெண் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அதில், “ஸ்பாட்டிஃபையில் இருந்து நீக்கப்பட்டுவிட்டேன். இத்தனை சீக்கிரத்தில் ஸ்பாடிஃபையில் இருந்து நீக்கப்பட்டது என் மனதை நொறுங்கச் செய்திருக்கிறது. ஆனால் என் தொழில் ரீதியான வாழ்க்கையின் அடுத்த நகர்வை தொடர்வதில் ஆவலாக இருக்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஸ்பாடிஃபை ஆப் தீமில் ரெஸ்யூம் தயாரித்து கவர்ந்திருந்த எமிலி வு என்ற பெண் அதே நிறுவனத்தில் தயாரிப்பு மேலாளர் பயிற்சியாளராக கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பணியாற்ற தொடங்கினார். அதன் பிறகு அதே ஆண்டின் செப்டம்பரில் இணை தயாரிப்பு மேனேஜர் பதவியை பெற்றவர் தற்போது அந்த நிறுவனத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது.