க்சேனியா கரெலினா
க்சேனியா கரெலினா  ட்விட்டர்
உலகம்

உக்ரைனுக்கு ஆதரவாக நிதி திரட்டிய பெண்: கைதுசெய்து கண்ணைக் கட்டி அழைத்துச் சென்ற ரஷ்யா.. வைரல் வீடியோ

Prakash J

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், இன்னும் இரண்டு நாட்களில் இரண்டு ஆண்டுகளைக் கடக்க இருக்கிறது. ஆயினும் இருதரப்பிலும் போர் தீவிரமாகி வருகிறது.

அதேநேரத்தில், ரஷ்யாவைப் பொறுத்தவரை அந்நாட்டில் உக்ரைனுக்கு யார் ஆதரவு தெரிவித்தாலும் அவருக்கு எதிராகக் கடுமையான தண்டனைகளை விதித்து வருகிறது. அந்த வகையில், க்சேனியா கரெலினா (Ksenia Karelina) என்ற பெண்ணைத் தேசத் துரோகக் குற்றத்தின்கீழ் கைது செய்துள்ளது. ரஷ்யா, அமெரிக்கா என இரட்டைக் குடியுரிமைப் பெற்றுள்ள இவர், உக்ரைன் ராணுவத்திற்கு நிதி திரட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். 51.80 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.4,500) நிதியை அவர் திரட்டியதாகக் ரஷ்ய நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் அவர்மீது, அமெரிக்காவில் உக்ரைனுக்கு ஆதரவான நிகழ்த்தப்பட்ட பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, ரஷ்யாவின் யெகடெர்ன்பெர்க்கில் அவர் கைதுசெய்யப்பட்டார். அங்கு அவருடைய கண்கள் கட்டப்பட்டு, அதிகாரிகளால் குறுகிய பாதை வழியாக அழைத்துச் செல்லப்படுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரஷ்யாவில் இவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.