கண்ணில் கருமை நிற டாட்டூ போட்ட இளம்பெண் பார்வையை இழந்த சம்பவம் போலாந்தில் நிகழ்ந்துள்ளது.
போலாந்து நாட்டின் ரோக்லாவ் நகரத்தை சேர்ந்த 25 வயது இளம் பெண் அலெக்சாண்ட்ரா சடோவ்ஸ்கா. மாடலான இவர், ராப் இசை பாடகர் மற்றும் ஃபைட்டரான போபெக்கின் ரசிகையாக இருக்கிறார். போபேக் தனது இரண்டு கண்களிலும் கருமை நிற டாட்டூவை போட்டிருப்பார். இந்நிலையில் அதேபோன்று தனக்கு கண்ணில் டாட்டூ போட வேண்டும் என அலெக்சாண்ட்ரா, ஒரு டாட்டூ போடும் நபரை அணுகியுள்ளார்.
கண்ணில் டாட்டூ போடும் அனுபவம் இல்லாத போதிலும், பணத்திற்காக அந்த நபர் பொய் கூறி அலெக்சாண்ட்ராவிற்கு டாட்டூ போட்டதாக தெரிகிறது. கண்ணில் கருமை நிறத்தை வைத்து டாட்டூ போட்டு முடித்தவுடன், இரண்டு கண்களும் எரிச்சலாக இருப்பதாகவும், வலிப்பதாகவும் அலெக்சாண்ட்ரா தெரிவித்திருக்கிறார். ஆனால் சிறிது நேரத்தில் சரியாகிவிடும் எனக்கூறி, வலி நிவாரணி ஒன்றை கொடுத்து அப்பெண்ணை டாட்டூ போடும் நபர் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் தனது இடது கண் பார்வையை அலெக்சாண்ட்ரா இழந்துள்ளார். உடனே மருத்துவர்களிடம் அப்பெண் சென்றிருக்கிறார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கண்ணில் கருமை நிற டாட்டூ பரவியதால், இதனை சரி செய்ய முடியாது என தெரிவித்துள்ளனர். அத்துடன் விரைவில் வலதுபக்க கண்ணிலும் பார்வையை இழக்க நேரிடும் என தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலாந்து காவல்துறைக்கு தகவல் தெரியவர, டாட்டூ போட்ட நபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.