உலகம்

வீட்டிற்குள் சிக்கிக் கொண்ட உரிமையாளரை காப்பாற்றிய அறிவாளி பூனை

வீட்டிற்குள் சிக்கிக் கொண்ட உரிமையாளரை காப்பாற்றிய அறிவாளி பூனை

webteam

வீட்டுக்குள் சிக்கிகொண்ட பெண் ஒருவரை அவர் வளர்த்த பூனை காப்பாற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

செல்லப்பிராணிகள் வளர்ப்பதை பெரும்பாலானோர் விரும்புவார்கள். அது ஒரு விலங்கு என்பதையும் தாண்டி குடும்பத்தில் ஒருவராகவே இருக்கும். செல்லப்பிராணிகளின் குறும்புகளை பலரும் சமூக வலைத்தளங்களில் வீடியோக்களாக பதிவிட்டு அதனை வைரலாக்கி வருகின்றனர். சில நேரங்களில் செல்லப்பிராணிகள் நம்மை ஆச்சரியம் கொள்ளச்செய்யும் அளவுக்கு எதையாவது செய்து லைக்ஸ்களை அள்ளிவிடுகிறது. அப்படித்தான், அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள ஒரு பூனை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் வசித்துவரும் கேப்ரியல்லா என்பவர் போகோ என்ற பூனையொன்றை வளர்த்து வருகிறார். வீட்டில் படுசுட்டியாக சுற்றிக்கொண்டிருக்கும் போகோ எதாவது குறும்புத்தனத்தை செய்துகொண்டிருக்கும். இந்நிலையில் கேப்ரியல்லா ஒரு அறையினுள் இருப்பதை மறந்த அவரது சகோதரி அவரை அறைக்குள்ளேயே பூட்டிவிட்டுச் சென்றுவிட்டார். உள்ளே சிக்கிக்கொண்ட கேப்ரியல்லா செய்வதறியாமல் திகைத்துள்ளார்.

அறையில் கண்ணாடி கதவு பொருத்தப்பட்டிருந்ததால் தான் வளர்க்கும் பூனையை சைகை மூலமே வழிநடத்த அந்த அறிவாளி பூனையும் கதவை சரியாக திறந்து அமைதியாக நின்றது. இதை வீடியோவாகவும் எடுத்த கேப்ரியல்லா, அதை சமூக வலைத்தளங்களில் பகிர அது தற்போது ஹிட் அடித்துள்ளது. 

பூனை என்றால் சோம்பேறி விலங்கு என்று யாராவது சொன்னால் அவர்களுக்கு இந்த வீடியோவை காட்ட வேண்டும் என்றும், இந்தப் பூனை உண்மையிலேயே அறிவாளி என்றும் பலரும் போகோவை புகழ்ந்து வருகின்றனர்.